Aran Sei

தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து மனு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

5,789 நிறுவனங்களை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்றும் அதனால், அவற்றுக்கான உரிமம் பறிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் முடிவை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

நேற்று(ஜனவரி 20), உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு, அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 24ஆம் தேதி விசாரணை செய்வதாக கூறி ஒத்திவைத்துள்ளது.

குளோபல் பீஸ் இனிஷியேட்டிவ் என்பது இந்தியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள அனாதைகள் மற்றும் விதவைகளை மீட்கும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.

அன்னை தெரேசாவின் நிறுவனத்திற்கு உரிமம் மறுக்கும் ஒன்றிய அரசு – உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு

“மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி போன்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமத்தை சில “பாதகமான தகவல்கள்” இருந்தது என்ற தெளிவற்ற காரணங்களுக்காக ரத்து செய்வது மற்ற அனைத்து அரசு சாரா நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமத்தைப் புதுப்பிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று ஆனந்த் பால் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 6,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமத்தை ரத்து செய்த ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறும் இம்மனு கோரியது.

“இந்த விவகாரத்தை ஜனவரி 24 அன்று அமர்வின் முன் வைக்கவும். மனுவின் முன்கூட்டிய நகலை ஒன்றிய அரசு நிறுவனங்கள் தரப்பின் ஆலோசகரிடம் வழங்க சுதந்திரம் அளிக்கப்படுகிறது” என்று அமர்வு கூறியுள்ளது.

‘அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியில் உள்ள யாரும் பாதிக்கப்படக் கூடாது’- மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவு

அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற வேண்டுமானால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அச்சட்டத்தின் கீழ் பதிவு நிறுத்தப்பட்ட அல்லது பதிவு காலாவதியான நிறுவனங்கள் என இந்திரா காந்தி தேசிய கலை மையம், இந்திய பொது நிர்வாக நிறுவனம், லால் பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, லேடி ஸ்ரீ ராம் பெண்களுக்கான கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்பாம் இந்தியா ஆகியவை அடங்கும்.

எஃப்சிஆர்ஏவின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்ஜிஓக்கள் மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது ஜனவரி 1ஆம் தேதி முதன் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்தது.

அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்தினுடைய உரிமம் புதுப்பிப்பு- உள்துறை அமைச்சகம் தகவல்

டிசம்பர் 31ஆம் தேதி வரை எஃப்சிஆர்ஏவில் 22,762 பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருந்தன.  ஜனவரி 1 ஆம் தேதி, அந்த எண்ணிக்கை 16,829 தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக குறைந்தது.

அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் பதிவை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நிராகரித்திருந்தது. ஒன்றிய அரசின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், எஃப்சிஆர்ஏ சட்டத்தின்கீழ் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் பதிவு புதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்