நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பான உத்தரபிரதேச காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றும் அவ்விசாரணையை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று(நவம்பர் 8), இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, உத்தரப் பிரதேச அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் கரிமா பிரசாத் ஆகியோரிடம் விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணையை மேற்பார்வையிட, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது ரஞ்சித் சிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
“விசாரணை நாங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரங்களின் தடயவியல் அறிக்கைகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்” என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.