Aran Sei

கோமியத்தை விமர்சித்த செயல்பாட்டாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது – உடனடியாக விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தொற்றை பசுமாட்டு சாணமோ, மூத்திரமோ குணப்படுத்தாது என்று விமர்சித்த சமூக செயல்பாட்டாளர் லேய்ச்சோம்போம் எரெண்டோவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தடுப்புக்காவலில் வைத்திருப்பது வாழ்வதற்கான அவரின் அடிப்படை உரிமை மற்றும் சட்டத்திட்டங்களுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா தொற்றால் மரணமடைந்த மணிப்பூர் பாஜக தலைவர் தொடர்பாக சமூக வலைதளத்தில் எழுதியதாக, மணிப்பூர் மாநில பாஜகவின் துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரின் புகாரின் பேரில், அரசியல் ஆர்வலர் எரெண்டோ லெய்கொம்பம்மை, அவரது வீட்டில் வைத்து அம்மாநில காவல்துறையினர் கைது செய்தது.

கொரோனோவால் உயிரிழந்த மாநில பாஜக தலைவர் சாய்கோம் திகேந்திர சிங்கை அவமானப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘கோமியமும் சாணமுமல்ல அறிவியலே கொரோனாவை குணப்படுத்தும்’ – சமூக வலைதளப் பதிவிற்கு இருவர் கைது

மே 13 அன்று, திகேந்திர சிங் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் எழுதிய பதிவில்,  “சந்தியடையுங்கள் ஜி, மாட்டுச் சாணமும் கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது. அறிவியலும் அடிப்படை அறிவுமே கொரோனாவை குணப்படுத்தும்.’ என்று எரெண்டோ குறிப்பிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட எரெண்டோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கு எதிராக அவரது தந்தை ரகுமணி சிங், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவில், மணிப்பூர் மாநில பாஜக தலைவர் கொரோனா தொற்றால் இறந்ததற்கு பின்னரே அக்கருத்து கூறப்பட்டதாகவும், எண்ணற்ற பாஜக தலைவர்கள் அறிவியல் பூர்வமற்ற முறையில் கொரோனா தொற்றை பசுமாட்டு சாணமும், பசுமாட்டு மூத்திரமும் கொரோனவைக் குணப்படுத்தும் என்று வதந்தி பரப்பிய நிலையிலேயே இந்த விமர்சனம் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்த மனுவில், “எரெண்டோ அவர்மீது பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்குக்காகச் சில நாட்கள் மட்டுமே விசாரணைக் காவலில் இருந்தார். அப்போது அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில்,  அவர் மீண்டும்   தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் பேச்சுரிமையை முடக்கும் பொருட்டே, அவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது.” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாஜகவை விமர்சித்ததால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட சமூகசெயல்பாட்டாளர் – வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

மேலும், கடந்த மே 17 அன்று மாவட்ட நீதிபதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையைத் தள்ளுபடி செய்யவேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூலை 19), இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர். ஷா அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இன்னும் ஓர் இரவு கூட செயல்பாட்டாளர் எரெண்டோ சிறையில் அடைக்கக் கூடாது என்றும் இன்று மாலை 5 மணிக்குள் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருப்பது வாழ்வதற்கான அவரின் அடிப்படை உரிமை மற்றும் சட்டத்திட்டங்களுக்கு எதிரானது என்று அமர்வு குறிப்பிட்டுள்ளது.

பசுஞ்சாணமும் கொரோனாவும்; மோடி அரசின் அறிவியல் ஆலோசனைகள் – சத்யசாகர்

இந்த வழக்கு தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து பதிலைத் தாக்கல் செய்வோம் என்று கூறிய அரசுத்தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, எரெண்டோவின் விடுதலைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

எரெண்டோ லெய்கோம்பமின் தந்தை ரகுமணி சிங்கின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஷதன் பரசாத், சாதாரண தண்டனை பிரிவுகளின் கீழ் வராத வழக்குகளில் கூட தடுப்புக்காவல் சட்டங்களை அரசு அதிகளவில் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்