Aran Sei

பெகசிஸ்க்காக மேற்கு வங்க அரசின் ஆணையத்தை ரத்து செய்ய வலியுறுத்திய ஒன்றிய அரசு – தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

credits : the indian express

பெகசிஸ் வேவு பார்த்தல் விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்த மேற்கு வங்க அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில் மேற்கு வங்க அரசு அமைத்திருக்கும் இருநபர் விசாரணை ஆணையத்தின் மற்றொரு உறுப்பினராக கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

பெகசிஸ் உளவு மென்பொருள் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்,  சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் அமைச்சர்கள் வேவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விசாரணை ஆணையம் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஜூலை 28 ஆம் தேதி விசாரணை ஆணையம் அமைத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ”பெகசிஸ் வேவு பார்த்தல் விவகாரத்தில் ஒன்றிய அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர்கள் மௌனம் காக்கின்றனர்” என குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுக்களில் மீதான விசாரணையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கும் ஒன்றிய அரசு, ”பெகசிஸ் விவகாரம் தொடர்பாக அனைத்து அம்சங்களையும் ஆராய குழு அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசின் அறிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்க மற்றும் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”விசாரணை ஆணையம் அரசியலமைப்பிற்கு எதிரானது. எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், “உங்கள் வாதத்தில் தெளிவில்லை. நீங்கள் விசாரணை வேண்டும் என்று கூறுகிறீர்கள். பின்னர்,  விசாரணை ஆணையம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் கூறுகிறீர்கள். பிரமாண பத்திரத்தில் கூறியதில், நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்