Aran Sei

சிஏஏ போராட்டத்தில் கைதான மாணவர்களின் பிணைக்கு எதிரான மனு : தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான மாணவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (ஜூன் 17), டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து டெல்லி கலவரக்கில் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு சட்டவிரோத (நடவடிக்கைகள்) தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

ஜூன் 15 ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியபிறகு, அவர்களை விடுவிக்க டெல்லி காவல்துறை கால தாமதம் செய்து வந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

’அநீதிக்கெதிரான போராட்டம் தொடரும்’ – சிஏஏ போராட்டத்தில் கைதாகி பிணையில் வந்த மாணவர் பிரதிநிதிகள் பிரகடனம்

பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திர பேடி, “குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன்தாரர்கள் தொடர்பான விசாரணை நேற்று (ஜூன் 16) மதியம் ஒரு மணிக்குள் முடிவடைந்திருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். விசாரணை கால தாமதம் ஆகும் என்பதை நீதிமன்ற மறுக்கவில்லை. ஆனால், பிணை வழங்கப்பட்டவர்களை விடுவிக்காமல் இருப்பதற்கு, இது ஒரு நம்பத் தகுந்த காரணமாக இருக்க முடியாது.” என்று தெரிவித்திருந்தது.

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா இருவரும் இரவு 7 மணிக்கும், ஆசிப் இக்பால் தன்ஹா இரவு 7.30 மணிக்கும் விடுவிக்கபட்டதாக டெல்லி சிறைச்சாலைகளுக்கான தலைமை இயக்குனர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறையினர் மனு தாக்கல் செய்தது.

டெல்லி கலவர வழக்கில் கைதான மாணவர்களுக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்றம் – உத்தரவு கிட்டவில்லை என்று கூறி விடுவிக்க மறுக்கும் சிறை நிர்வாகம்

இந்நிலையில், இன்று (ஜூன் 18), இம்மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் வி.ராமசுப்ரமணியன் அடங்கிய உச்ச நீதிமன்ற  அமர்வுக்கு முன் விசாரணை வந்துள்ளது.

அப்போது,  “இந்த கட்டத்தில், மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையில் உச்ச நீதிமன்றம் தலையிடாது.” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜூன் 15 ஆம் தேதி வழங்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எந்தவொரு நீதிமன்றத்திலும் முன்னுதாரணமாக முன்வைத்து வாதாடக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்