Aran Sei

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Image Credits: Scroll

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு சிபிஐ நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட 32 பேர் மீது குற்றம்சாட்டிய சிபிஐ, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.கே.யாதவ், குற்றத்தை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததாகக் கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

தீர்ப்பு வழங்கப்பட்டபின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. பின் அவரும் ஓய்வு பெற்றார்.

இது தொடர்பாக, செப்டம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றத்துக்கு, நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியிருப்பதால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்நிலையில், “பாதுகாப்பைத் தொடர வேண்டியது அவசியம் என நாங்கள் கருதவில்லை” என்று நீதிபதி ரோஹிண்டன் எஃப்.நாரிமன் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளதாக ‘தி இந்து‘ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டில், ‘வானம் விழுந்தாலும் நீதி கிடைக்கட்டும்’ எனும் முழக்கத்தை உச்ச நீதிமன்றம் முன்வைத்தது. அதன்படி, அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் அசாதாரண அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியது. அதைப் பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கைச் சரியான நேரத்தில் விசாரித்து நீதி வழங்குவதாகவும் கூறியது.

இருப்பினும், இந்த வழக்கின் தீர்ப்பு பலராலும் விமர்சிக்கப்பட்டது. முன்னதாக இத்தீர்ப்பு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும் அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; இது அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும்,” எனத் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்