ஸ்டெர்லைட் ஆலையை இடைக்காலமாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்குத் தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வேதாந்தா நிறுவனத்திற்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, “ஆலை செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அது நேரடியாக 4,000 பேருக்கு வேலை வழங்கியது. இதைத் தவிர, 20,000 ஊழியர்கள் பயனடைந்தனர். ஆலைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் பிற தொழில்களில் ஈடுபட்டதின் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்” என்று வாதிட்டுள்ளார்.
“இந்த ஆலை நாட்டின் மொத்த செப்புத் தேவையில் 36% உற்பத்தி செய்தது. ஆலை மூடப்பட்டதால் இது தடைபட்டுள்ளது. ஆலையைத் தற்காலிகமாகத் திறப்பதால், இந்த மிகப்பெரிய தேசிய விரயத்தைத் தடுக்க முடியும். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை 2-3 மாதங்களுக்குத் திறப்பதுதான் இதற்குத் தீர்வளிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.வி.விஸ்வநாத் மற்றும் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் இந்த வாதத்தை மறுத்துள்ளனர். மாசு விதிகளை மீறிச் செயல்பட்டதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“2013-ம் ஆண்டு, ஆலையைத் திறக்க நீதிபதிகள் அனுமதி வாங்கியவுடன் சுற்றுச்சூழல் மாசு மேலும் அதிகரித்தது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கக் கூடாது” என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட உச்ச நீதிமன்றம் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.