Aran Sei

`காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும்’ – உச்ச நீதிமன்றம்

Image Credits: New Indian Express

நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையத்தில் வரும் ஜனவரி 27-ம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பார் அண்ட் பெஞ்சில் செய்தி வெளியாகியுள்ளது. இது இரவில் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடிய வசதிகளுடனும் ஒளியைப் பதிவு செய்யும் வசதிகளுடனும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் தலைமையிலான அமர்வு, அனைத்து மத்திய விசாரணை அமைப்புகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் காட்சிப் பதிவுக் கருவிகளை நிறுவுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, மத்திய புலனாய்வுப் பிரிவு, தேசியப் புலனாய்வு அமைப்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.

தேவைப்பட்டால், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை ஆதாரங்களுக்காக 18 மாதங்கள் சேகரித்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. “தரமான கேமராக்களைப் பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில், லாக்-அப் வெளிப்பகுதி, வராண்டா, வரவேற்பறை, காவல் ஆய்வாளர் அறை, துணை ஆய்வாளர் அறை, காவல்நிலைய சுற்றுப் பகுதி, காவல் நிலைய பின் பகுதி, கழிவறை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில், சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றைப் பயன்படுத்திக் காவல் நிலையங்களுக்கு மின்சாரம் மற்றும் இணையதள வசதிகளை வழங்குவது மாநில அரசுகளின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. “வழங்கப்படும் இணைய வசதிகள் தெளிவான படங்களையும், ஒளிப்பதிவுகளையும் வழங்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

“காவல் நிலையத்தில் தவறுகளோ அல்லது மனித உரிமை மீறலோ நடக்கும் பட்சத்தில் இதற்காக ஏற்படுத்தப்பட்ட குழு சம்பந்தப்பட்ட வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் ஏற்படும் சித்ரவதை மற்றும் மரணம் ஆகிய விவகாரங்களில் காவல்துறையினருக்கு எதிரான புகார்களைக் கையாளும்போது, ​​மனித உரிமைகள் ஆணையமும் நீதிமன்றங்களும், காவல் நிலயத்திடமிருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கேமராக்களை நிறுவுவதை மேற்பார்வையிட மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுவை அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்