Aran Sei

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Image Credits: India Legal

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் காப்பானில் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை டெல்லி எய்ம்ஸுக்கோ அல்லது டெல்லி அரசு மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5 அன்று, ஹத்ராஸ் நகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் ஆதிக்க சாதியினரால் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானை அம்மாநிலஅரசு உபா சட்டத்தின் கீழ் கைது செய்தது.

சிறுநீர் கழிக்கக்கூட உரிமை மறுக்கப்படும் பத்திரிகையாளர் சித்திக் காப்பான் – கைவிலங்கிடப்பட்டு கொரோனா சிகிச்சையளிக்கப்படும் அவலம்

மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஏப்ரல் 20 அன்று குளியல் அறையில் வழுக்கி விழுந்துள்ளார்.  அவர் மதுராவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதையெடுத்து, அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரைக் காவல்துறை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிப்பதில்லை என்றும், கையில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் பாட்டிலிலேயே சிறுநீர் கழித்து வருவதாக அவரது மனைவி ரைஹானா காப்பான் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

நேற்று (ஏப்ரல் 27) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணன், நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்விற்கு முன் வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, சித்திக் காப்பானுடைய தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 28), அவ்வழக்கு மீண்டும் அந்த அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “சித்திக் காப்பானில் உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை டெல்லி எய்ம்ஸுக்கோ அல்லது டெல்லி அரசு மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல வேண்டும். அவர் குணமடைந்த பிறகு அவரை மீண்டும் உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா சிறைக்கு அனுப்பலாம்.” என்று உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், சித்திக் காப்பானின் சார்பாக இவ்வழக்கை நடத்திவரும் கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கம், அவரை விடுதலை செய்யக் கோரி வாதிட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்