Aran Sei

“டெல்லிக்குள் யார் நுழையலாம் என்று உத்தரவிட முடியாது” – டிராக்டர் பேரணிக்கு தடைகோரி வழக்கில் நீதிமன்றம் கருத்து

டெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரிய, டெல்லி காவல்துறையின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது டெல்லி காவல்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரம் என்று கூறி, வரும் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக் கோரி, 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்த டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்குமாறு, மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறை மூலம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜனவரி 26 பேரணி – லட்சம் டிராக்டர்களை அணிதிரட்டும் விவசாயிகள் சங்கங்கள்

அந்த மனுவில், “குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்துவது குடியரசு தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும். தொந்தரவுக்கு உள்ளாக்கும். அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சினையையும் ஏற்படுத்தும். நாட்டுக்கே மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும். அதனால், டிராக்டர் பேரணி நடத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும். டிராக்டர் பேரணி மட்டுமல்லாது, வாகன அணிவகுப்பு, பேரணி என்று எந்தவகையிலும் டெல்லி தலைநகர் பகுதியில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.” என்று கோரப்பட்டிருந்தது.

ஜனவரி 11ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறையினர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

நாடு முழுவதும் மாநில,மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

இந்நிலையில், இன்று (ஜனவரி 18) இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “டெல்லி காவல்துறையில் என்னென்ன அதிகாரிகள் இருக்கின்றன, அவர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் கூற வேண்டுமா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் சொல்ல முடியாது. டெல்லிக்குள் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நுழைவது என்பது டெல்லி காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு விவகாரம். டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியது டெல்லி காவல்துறை. அவர்கள்தான் முதல் அதிகாரம் படைத்தவர்கள். நீதிமன்றம் அல்ல” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

“காவல்துறை அதிகாரிகள் குறித்து நாங்கள் ஏதும் கூறமாட்டோம். இதைத் தீர்மானிக்க வேண்டிய அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது. அதனால், இந்த வழக்கை நாங்கள் ஒத்திவைக்கிறோம். வரும் 20 ஆம் தேதி மீண்டும் விசாரிக்கிறோம்.” என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் அமர்வு, அரசு தரப்பு வழக்கறிஞரிடம், விவசாயிகள் தரப்பில் யாரேனும் ஆஜராகியுள்ளார்களா என்று எழுப்பிய கேள்விக்கு, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் துஷ்யந்த் தவேயும், மூத்த வழக்கறிஞர் ஏ.பி.சிங்கும் ஆஜராகியுள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

’விவசாயிகளின் ட்ராக்டர் பேரணிக்கு இன்று ட்ரைலர்’ – டெல்லி நெடுஞ்சாலைகளில் குவிந்த விவசாயிகள்

அதைத் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் ஏ.பி.சிங், “விவசாய சட்டங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் அனைத்து உறுப்பினர்களையும் மாற்றிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். 4 பேருமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் தான். இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “அனைத்து மனுக்களையும் ஒவ்வொரு மனுவாக வரும் நாட்களில் இதே அமர்வு விசாரிக்கும்.” என்று உறுதியளித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்