Aran Sei

பாவ மன்னிப்பு வாக்குமூலம் – கேரள தேவாலயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கேரளாவின் மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயத்தில் கட்டாயப்படுத்தி பாவமன்னிப்பு கூறவைப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேவாலயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மனுதாரர்கள், மேத்யூ மாதச்சன் மற்றும் சி.வி.ஜோஸ் ஆகியோர், ஒரு பாதிரியாருக்கு முன் “புனித ஒப்புதல் வாக்குமூலம்” (Sacramental confession) அளிப்பது மனித கவுரவத்தையும் சிந்தனை சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளனர். திருச்சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவோமோ எனும் அச்சத்தின் பெயரில், விசுவாசிகள் அதற்கு எதிராகப் பேசக் கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, முதலில் வழக்கறிஞர் சஞ்சய் பரேக்கிடம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, கே.எஸ்.வர்கீஸ் வழக்கில், 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவைப் பரேக் மேற்கோள் காட்டியுள்ளார். அதில், கேரளாவில் உள்ள அனைத்து சிவில் மற்றும் உயர் நீதிமன்றங்கள் இந்த வழக்கின் உத்தரவை மீறி எந்தவொரு தீர்ப்பையும் வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பாதரியார்கள் முன், கட்டாயத்தின் பெயரில் ஒப்புதல்கள் அளிப்பது அரசியலமைப்பின் பிரிவுகள் 21 (தனிப்பட்ட சுதந்திரம்) மற்றும் 25 (மத சுதந்திரம்) ஆகியவற்றை மீறுகிறதா என்ற கேள்வியை இந்த மனு எழுப்பியுள்ளது.

கட்டாயத்தின் பெயரில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெண்களைச் சுரண்டுவது மற்றும் அச்சுறுத்துவது உள்ளிட்ட கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்ததாக மேத்யூ மாதச்சனும் ஜோஸும் தெரிவித்துள்ளனர்.

“ஒரு நபர், வாக்குமூலம் அளிக்கவில்லை என்றால், அந்த நபரின் பெயர் திருச்சபை பதிவேட்டில் இருந்து அகற்றப்படும். மேலும் அவர்கள் தேவாலயத்தின் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

“ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதை குறித்து அவர் திருச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும். அதை செய்யத் தவறினால் திருச்சபையின் பாதிரியார் அந்த நபரை உறுப்பினராக அங்கீகரிக்கமாட்டார். ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கத் தவறியதன் பெயரில் பாரியாரால் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும்” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புனித ஒப்புதல் வாக்குமூலம்’ நடைமுறையை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கக் கோரிய மனுவை 2018-ம் ஆண்டில் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நடைமுறை கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதற்கான மிகச்சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும் என்று நீதிமன்றம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்