Aran Sei

நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியைத் தொடங்க கூடாது – உச்ச நீதிமன்றம்

Image Credits: The Better India

நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், நாடாளுமன்றம் கட்டுமானம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை கட்டுமானத்தைத் தொடங்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ரூ.861.9 கோடி செலவில் கட்டித்தருவதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் டெண்டரில் தெரிவித்துள்ளது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டிடத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, கட்டுமான பணிகளைத் தொடங்கியுள்ளதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

“நாங்கள் உங்களிடம் மரியாதை காட்டியுள்ளோம், நீங்கள் விவேகமான முறையில் செயல்படுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதே மதிப்பை நீங்கள் நீதிமன்றத்திற்குக் காட்ட வேண்டும். கட்டிடத்தை இடிக்கவோ அல்லது கட்டுமான பணியைத் துவங்கவோ கூடாது” என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் கூறியுள்ளதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா மட்டுமே நடைபெறும் என்றும், தற்போது எந்தக் கட்டுமானமும் தொடங்கப்படாது என்றும் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

கட்டிடம் தொடர்பான ஆவண பணிகளை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை என்றும் தற்போது எந்த மரங்களும் வெட்டப்பட கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

2019-ம் ஆண்டு, செப்டம்பரில் இந்த மறுசீரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. முக்கோண வடிவத்தில், 900 முதல் 1,200 உறுப்பினர்கள் அமரும் வகையில் இந்தக் கட்டிடத்தைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு, ஆகஸ்டுக்குள் இதைக் கட்டமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்