பாலியல் குற்றவாளிகளுக்கு, பிணை நிபந்தனைகளை விதிக்கும்போது, நீதிமன்றங்களின் உணர்திறனை மேம்படுத்த வழிகளை பரிந்துரைக்குமாறு, உச்ச நீதிமன்றம், அரசுத் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில், பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையில் ராக்கி கட்ட உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், ஓய்வுபெற்ற இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சில பெண் வழக்கறிஞர்கள் சார்பில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், “பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கும்போது, எந்த வகையான நிபந்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன என்பதற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலிடம் இது தொடர்பான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
“பிணை நிபந்தனைகளில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டி அதில் சேர்க்கப்பட வேண்டியவற்றை பரிந்துரைக்குமாறு,” தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த அமர்வு, வழக்கின் விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அக்டோபர் 16 அன்று, இந்த விவகாரத்தில், வேணுகோபாலின் கருத்துக்களை கேட்கப் நீதிபதிகள் அமர்வு முடிவு செய்துள்ளது.
மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் குறித்து அமர்வு கவலையைத் தெரிவித்துள்ளது.
‘அதிர்ச்சியை துச்சமாக மதிக்கும் செயல்‘
வழக்கறிஞர் அபர்ணா பட் தலைமையிலான ஒன்பது வழக்கறிஞர்கள், மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவு “அவரது (பாதிக்கப்பட்டவரின்) உணர்வுகளை துச்சமாக மதிக்கும் செயல்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
“இது போன்ற பல உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன,” என்று சஞ்சய் தெரிவித்துள்ளார். “ஏற்கனவே அதிர்ச்சியடைந்துள்ள பெண்களை இவை மேலும் கவலைக்குள்ளாக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து வெகு தொலைவில் வைக்க சட்டம் பரிந்துரைக்கிறது. ஆனால், மத்திய பிரதேச உயர் நீதிமன்றமோ, குற்றம் சட்டப்பட்டவரை பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கே (குற்றம் நடைபெற்ற இடம்) செல்லும்படி உத்தரவிட்டுள்ளது,” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அப்போது, ராக்கி கட்டும்போது நடைபெறும் வழக்கமான சடங்கை போல், ரூ.11,000 -ஐ அப்பெண்ணுக்கு பரிசாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பெண்ணின் ஆசிர்வாதத்தை பெறவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது” என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவின் படி, “பெண்ணின் மகனுக்கு, உடைகள் மற்றும் இனிப்புகளை வாங்குவதற்காக ரூ.5,000 வழங்குமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”.
“இதுபோன்ற உத்தரவுகள் பெண்களை பாதிக்கும்,” என்று வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் கூறியுள்ளார்.
“குற்றம் சாட்டப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் திருமணம் செய்துவைப்பது அல்லது இருவருக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதின் மூலம் சமரசத்திற்கு முயற்சிப்பது பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து, நீதிமன்றங்களுக்கு உணர்த்துவதற்கான பல ஆண்டுகளாக செய்யப்பட்ட முயற்சிகளை பலனற்றதாக்குவதில் மட்டுமே இந்தத் தீர்ப்பு வெற்றி பெற்றுள்ளது,” என்றும் சஞ்சய் பாரிக் கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.