Aran Sei

வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசும் தமிழக அரசு : தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிக்கும் – கி. வீரமணி எச்சரிக்கை

தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்

முன்னர், பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர சமஸ்கிருதச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டும் எனவும் கடந்த நவம்பர் மாதம், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகக் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பில் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசப்பட்டுள்ளதாகத் தெரிவவருகிறது. இந்த நடவடிக்கையைத் தமிழகக் கல்வித் துறையே மேற்கொண்டதைவிட, அதிமுக அரசுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் மிகப்பெரிய அவமானம் வேறு இருக்க முடியுமா? என்று வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ”தோலைக்கடித்து, துருத்தியைக் கடித்து, பிறகு மனிதனையே கடித்த கதை போல, வெளியே உள்ள சில ஹிந்துத்துவக் காவிகள் விஷமத்துடன் வள்ளுவர் சிலை மீது காவி பூசி, தமிழக அரசின் காவல்துறையே அதனை எதிர்த்து வண்ணத்தை மாற்றி, வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இப்போது அதே காவி சக்திகள் தமிழகக் கல்வித் துறைக்குள் ஊடுருவிவிட்டனவா?” என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இச்செயலைக் கண்டிப்பதாகவும், இதற்குக் காரணமான அதிகாரிகளை அல்லது ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை களையெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசரம். அவசியம் என்றும் இல்லையேல் தமிழ்நாடு தழுவிய கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்,

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்