Aran Sei

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

க்கிம்பூர் வன்முறையில் பாதிப்புக்குள்ளானோரை சந்திக்க லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது என்று சிவசேனா கட்சியின் மாநிலங்களைவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி, அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வன்முறை நடைப்பெற்ற லக்கீம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அப்பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் முடக்கப்பட்டன. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

வன்முறை நடைபெற்ற அன்று இரவு, ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி லக்கிம்பூர் கேரிக்கு செல்ல முயன்றபோது, உத்தரபிரதேச காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனால், காவல்துறையினருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இக்காணொளியை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

அதைத்தொடர்ந்து, 36 மணி நேரத்திற்கு பின்னர், நேற்று(அக்டோபர் 5), பிரியங்கா காந்தி மீது உத்தரபிரதேச காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 6), டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள சஞ்சய் ராவத், “லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருகிறது. லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்ன மாதிரியான சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“உத்தரபிரதேசம் மாநிலம் என்ன பாகிஸ்தான் நாட்டிலா இருக்கிறது? ஏன் உத்தரபிரதேசத்திற்கு செல்ல முயலும் இந்தியர்கள் தடுக்கப்படுகிறார்கள்? ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஆளும் கட்சியுடைய கூண்டுக்கிளியைப் போன்று லக்கீம்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. அரசு கூறும் விதிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

“பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர். ராகுல் காந்தியை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரைக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள். நம் நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா? லக்கிம்பூர் கெரிக்கு ஒரு பொதுவான குழுவை அனுப்புவது குறித்து எதிர்க்கட்சிகள் விரைவில் ஆலோசனை நடத்தும்” என்று சிவசேனா கட்சியின் மாநிலங்களைவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்