Aran Sei

மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் – பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சங்கம் கடிதம்

Image Credit : Indian Express

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு சம்யுக்ட் கிசான் மோர்ச்சா கடிதம் (எஸ்கேஎம்) எழுதியுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லைகளில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

போராட்டதில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றிய அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்நிலையில், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் போராட்டம்: ‘வழக்குகள் வாபஸ்; கைதான 93 நபர்களுக்கு நிவாரணம்’ – தமிழக அரசு அறிவிப்பு

இந்நிலையில், பேச்சு வார்த்தை மீண்டும் தொடர வேண்டும் என பிரதமர் மோடிக்கு, விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தும் சம்யுக்ட் கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.

விவசாய சங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகள் போராட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் ஒன்றிய அரசின் புறக்கணிக்கும் மனப்பான்மை குறித்து பேசப்பட்டிருப்பதாக, எஸ்கேஎம் தெரிவித்துள்ளது.

”கொரோனா பெருந்தொற்று காலத்தில், யாரும் தொற்றுக்கு உள்ளாவதை விவசாயிகள் விரும்பவில்லை. அதே நேரம், போராட்டத்தைக் கைவிடுவது சாத்தியமில்லை. இது வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான போராட்டம். இதில் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலமும் அடங்கியுள்ளது.” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடருமென காவல்துறை அறிவிப்பு

“எந்தவொரு ஜனநாயக அரசும், விவசாயிகளால் நிராகரிக்கப்பட்ட விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்றிருக்கும். மேலும், விவசாயிகளுக்கு நன்மை தரும் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட உத்திரவாதம் அளித்திருக்கும். உலகின் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு என்ற அடிப்படையில்,  விவசாயிகளுடனான தீவிரமான மற்றும் நேர்மறையான உரையாடலை மீண்டும் தொடர்வதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது” என எஸ்கேஎம் அந்தக் கடித்ததில் கூறியுள்ளது.

டெல்லி எல்லைகளில் ஆறு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருவதை குறிக்கும் வகையில் மே 26 ஆம் தேதியை ’கருப்பு தினமாக’ அனுசரிக்க விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி, மே 26 ஆம் தேதி தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகள் அனைத்திலும் கறுப்பு கொடிகளைக் ஏற்றுமாறு விவசாயத் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்