பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் எந்த திட்டமும் விவசாய அமைப்புகளுக்கு இல்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா நேற்று கூறியுள்ளது.
“ஜனவரி 5 அன்று விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட “பாதுகாப்புக் குறைபாடு” காரணமாகப் பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக” உள்துறை அமைச்சகம் (MHA) தெரிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் வந்திருந்தார்.
இந்த பிரச்சனை தொடர்பாக விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகையை ஒட்டி உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதிகேட்டு ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைது செய்யக் கோரி அடையாளப் போராட்டங்களை நடத்தினோம்.
ஜனவரி 5 அன்று விவசாயிகளில் சிலரை பெரோஸ்பூர் மாவட்டத் தலைமையகத்திற்குச் செல்லவிடாமல் காவல்துறையினரால் தடுத்ததால் விவசாயிகள் பல இடங்களில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
பிரதமர் காத்திருந்த மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்குப் பிரதமர் மேம்பாலத்தைக் கடந்து செல்வது பற்றிய தகவலே தெரியாது. பிரதமர் மோடி திரும்பிச் சென்ற பிறகுதான் இந்த தகவலை அவர்கள் ஊடகங்களில் இருந்து தெரிந்து கொள்கின்றனர்.
பாஜக கொடியுடன் ‘நரேந்திர மோடி ஜிந்தாபாத்’ என்று கோஷம் போட்டபடியே சென்ற ஒரு குழுவினர் மட்டுமே அந்த மேம்பாலம் அருகே வந்தனர். எனவே, பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்பது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட பொய் போலவே தெரிகிறது.
தனது பஞ்சாப் பேரணியின் தோல்வியை “மறைக்க”, பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தையும் விவசாயிகள் போராட்டத்தையும் ” தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி இழிவுப்படுத்தியுள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.