Aran Sei

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடரும்- விவசாய சங்கங்கள் அறிவிப்பு

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவி்த்துள்ளது.

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இதுவரை நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகள் உரிய தீர்வு எட்டப்படாமல் தோல்வியடைந்துள்ளன. மத்திய அரசு சார்பில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர குமார் தோமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவும், விவசாயிகள் சார்பில் விவசாயிகள் சங்க தலைவர்களும் பங்கேற்றனர்.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற 11 வது சுற்றுப்பேச்சுவார்த்தைக்குப் பின், விவசாயிகள் சங்கங்களும் மத்திய அரசும் அதிருப்தியுடன் கருத்து தெரிவித்திருந்ததால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இதனிடையில், இந்தச் சட்டங்களை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது. அதேநேரம், மத்திய அரசும் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த 18 மாதங்கள் நிறுத்திவைத்திருக்கிறது.

அடுத்த மாதம் 2 ஆம் தேதி 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவாசயிகளுக்கும் இடையே நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள்: “நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை” – தோல்வியில் முடிந்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்நிலையில், நேற்று (ஜனவரி 30), அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயிலான பேச்சுவார்த்தை முடிந்துவிடவில்லை, தொடர்ந்து நடக்கும் என்றும் தொலைப்பேசி அழைப்பில்கூட பேச்சுவார்த்தையை நடத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் பேச்சைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 30) இரவு சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் அறி்க்கை ஒன்றை வெளியி்ட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?

அதில், “விவசாய சட்டங்கள்குறித்து தாங்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் பேசுவதற்காகத்தான் விவசாயிகள் டெல்லிக்கு வந்துள்ளார்கள். அதனால், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற பேச்சுக்கே இடமில்லை. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட் ஆதார விலையை உறுதிசெய்யச் சட்டபூர்வ அங்கீகாரம் தேவை ஆகிய கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களைப் பலவீனமடையச் செய்யும் நோக்கில், சிதைக்கும் நோக்கில் டெல்லி காவல்துறையினர் செய்த முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்றும் அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள்மீது தாக்குதல் நடத்த காவல்துறையினர் தூண்டினார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சாய்நாத் தலைமையில் குழு? – இதற்கு சாய்நாத்தின் பதில் என்ன?

மேலும், “காவல்துறையினர் மற்றும் பாஜக குண்டர்களின் தொடர்ந்து செய்த வன்முறைமூலம் மத்திய அரசுக்கு உள்ளூர அச்சம் ஏற்பட்டுள்ளது. எங்கள் போராட்டம் நாடுமுழுவதும் அமைதியாகத் தொடரும் என உறுதியளிக்கிறோம்.” என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பினர் அறிக்கையில் கூறியுள்ளனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்