Aran Sei

பாரத் பந்த்திற்கு ஒவ்வொரு இந்தியரும் ஆதரவளிக்க வேண்டும்’ – போராடும் விவசாயிகள் குழு வேண்டுகோள்

மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 27 அன்று நடைபெறவுள்ள பாரத் பந்த்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்குப் போராடும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் பத்து மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தமான பாரத் பந்த் நடத்தவுள்ளதாக போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்திருந்தது.

இதன் ஏற்பாடுகள் துகுறித்து, சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவும், பாரத் பந்த்தை வெற்றிபெற வைக்க ஒவ்வொரு இந்தியருக்கும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா வேண்டுகோள் விடுக்கிறது. குறிப்பாக, தொழிலாளர்கள், வர்த்தகர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சமூகத்தின் அனைத்து பகுதியினரும் பங்கேற்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

300 நாட்களை கடந்த விவசாயிகள் போராட்டம் – செவி சாய்க்குமா ஒன்றிய அரசு?

அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் இந்தப் பாரத் பந்த்திற்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

“காலை ஆறு மணி தொடங்கி மாலை நான்கு மணிவரை பந்த் நடைபெறும். அப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்படும். பொது நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்தப்படாது. மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரதேவைகளுக்கு கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால தேவைகளுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். யாரையும் வலியுறுத்தத் தேவையில்லை. இந்த பந்த் அமைதியான முறையில் நடைபெறும்.” என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்