Aran Sei

‘பாரத் பந்தால் பயந்து போன பாஜக தலைவர்கள்’ – அகிலேஷ் யாதவ்

பாரத் பந்த்தின் நாடு தழுவிய வெற்றி ஆளும் பாஜக அரசை எரிச்சலடையச் செய்துள்ளது என்று உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு இயற்றிய மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டம் 300 நாட்களை எட்டியதை அடுத்து, போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா நாடு முழுவதும் பொது வேலை முடக்கத்தை அறிவித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தவிர்த்து, பெரும்பாலான எதிர்கட்சிகளும் மாநில கட்சிகளும் இந்த பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், தொழிற்சங்கத்தினரும் பலதரப்பட்ட அமைப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

போராடும் விவசாயிகளின் பாரத் பந்த்: ஆதரவு தெரிவித்து தென்னிந்தியா முழுவதும் மாநில கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நேற்று (செப்டம்பர் 27) காலை 6 மணியளவில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்  பர்னாலா ரயில்நிலையத்தில் ரயில் தண்டவாளங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக  உத்தரபிரதேசத்தில் இருந்து காசிப்பூர் செல்லும் சாலை  மூடப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை தெரிவித்திருந்தது.

தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் இந்த பந்த்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன. இம்மாநிலங்களில் பாரத் பந்த்தின் விளைவு காணப்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் முழுஅடைப்புப் போராட்டம் – டெல்லியில் சாலை,ரயில் போக்குவரத்து முடக்கம்

இதுதொடர்பாக, தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “பாரத் பந்த்தின் நாடு தழுவிய வெற்றி ஆளும் பாஜக அரசை எரிச்சலடையச் செய்துள்ளது. பாஜக தலைவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இன்று வீட்டை விட்டு வெளியே வர தைரியம் வரவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற செய்த முதலாளிகளுக்குக் கைமாறாக, அவர்களுக்கு உத்தரவுகளுக்கு ஏற்றப்படி பாஜக  வேலை செய்து வருகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்