Aran Sei

‘நல்வாழ்த்துகள்; வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி’ – அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் பாராட்டிய ஜக்கி வாசுதேவ்

றநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில் நிலங்களின் தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று  இந்து அறநிலையத்துறை அறிவித்ததற்கு, சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை என்று அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் ஜக்கி வாசுதேவ் பாராட்டியுள்ளார்.

நேற்று (மே 19), தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணையப்பதிவேற்றம் குறித்து 18.05.21 (நேற்று) எனது தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்திருந்தார்.

அந்த டிவீட்டுடன், இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையையும் இணைத்திருந்தார்.

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

இந்நிலையில், அந்த டிவீட்டை ரீ-டிவீட் செய்துள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு வாசுதேவ், அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் – சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்.” என்று அவர் கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிய ஜக்கி வாசுதேவை, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்து வந்தார்.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

இந்நிலையில், நேற்று (மே 19), ஜக்கி வாசுதேவ் குறித்து புது தகவல்கள், நிகழ்வுகள் எழும் வரை அவரைப்பற்றிக் கருத்து தெரிவிக்கப்போவதில்லை என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்