Aran Sei

ஆக்ஸிஜன் தேவைக்காக தனியார் திட்டத்திற்கு ஒரு கோடி நிதியளித்த சச்சின் – பி.எம் கேர்ஸ் மீது நம்பிக்கை இல்லையா?

நாட்டின் ஆக்சிஜன் தேவைக்காக, ஒரு கோடி ரூபாயை நிதியுதவியாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார். ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற நிதி திரட்டும் திட்டத்திற்கு அவர் இந்த நிதியை அளித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சச்சின், ”கொரோனா இரண்டாவது அலை நாட்டின் மருத்துவ கட்டமைப்பை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை முதன்மையானதாக இருக்கிறது.

நாட்டின் ஆக்சிஜன் தேவைக்கு உதவும் பொருட்டு, 250க்கும் மேற்ப்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் இணைத்து உருவாக்கியுள்ள ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற நிதி திரட்டும் திட்டத்திற்கு நிதியுதவி அளித்துள்ளேன். அவர்களது முயற்சியின் பலன் விரைவில் நாட்டின் பல மருத்துவமனைகளைச் சென்றடையட்டும்.

எனது விளையாட்டிற்கும், வளர்ச்சிக்கும் நீங்கள் அளித்த ஆதரவு விலைமதிப்பற்றது. இன்றைக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் பெருந்தொற்றை விரட்டப் பாடுபடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.

வழக்கமாக நாட்டில் பெருந்தொற்று அல்லது ஏதேனும் பெருந்துயர் ஏற்பட்டிருக்கும் சமயத்தில் நிதியுதவி அளிப்பவர்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கே நிதியைப் பெரும்பாலானவர்கள் வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின்போது சச்சின் டெண்டுல்கர், பிரதமரின் நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் தான் தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல், ஒரு தனியார் நிதி திரட்டும் திட்டத்திற்கு நிதியளித்துள்ளார்.

மேலும், அண்மையில் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்த கனடா அரசும் கூட பிரதமர் நிவாரண நிதி அல்லது பிஎம் கேர்ஸ் கணக்கிற்கு நிதி அளிக்காமல், மாறாக செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெலும் பி.எம். கேர்ஸ் நிதியின் வரவு செலவு கணக்கை வெளியிடக்கோரி எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்ததும் நினைவுகூரத்தக்கது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்