Aran Sei

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ’நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று’ – திருமாவளவன்

ரக உள்ளாட்சித் தேர்தலில்  திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு அரசின்   நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று என்றும்
விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கிடைத்த பேரங்கீகாரம் என்றும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அக்டோபர் 06 & 09 ஆகிய நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில், ஒன்றியக் குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான சில தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. அவற்றில் கணிசமான இடங்களில் அனைத்துத்தரப்பு மக்களின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடியுள்ளது.

‘சாவர்க்கர் சிறையில் இருந்தபோது காந்தி எவ்வாறு தொடர்பு கொண்டார்? – ராஜ்நாத் சிங்குக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் கேள்வி

மாவட்டக்குழு உறுப்பினருக்கென  போட்டியிட்ட நான்கில் மூன்று தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட  43இல் 27 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘தமிழ்நாடு அரசின் குடிசைப் பகுதி மக்களுக்கான மறு குடியேற்றம் மற்றும் மறு வாழ்விற்கான வரைவு அறிக்கை’ – தமிழில் வெளியிட செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

இந்த மகத்தான வெற்றி திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும் திமுக தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும்.

அத்துடன், சாதியவாத மதவாத சனாதன பிற்போக்கு சக்திகளின்  அபாண்டமான அவதூறுகளை, மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் விசிகவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர் என்பதற்கான சிறப்புச் சான்றாகும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் விசிகவுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கி மைய நீரோட்ட அரசியலில் விசிக ஒரு மகத்தான சக்தி என்பதை மீளுறுதி செய்துள்ள எம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்