“டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடக்கவிருந்த குடியரசு தினவிழா அலங்கார ஊர்தி அணிவகுப்புக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார் படங்கள் அடங்கிய ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைச் சுதந்திரப் போராட்ட வரலாறு தெரியாத ஒன்றிய அரசின் நிபுணர் குழு நிராகரித்துள்ளது” என்று புதுச்சேரியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டின் ஊர்தியைப் புறக்கணிக்காமல், அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய விடுதலை போராட்டத்தில் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. விடுதலை போராட்ட வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சியில் தான் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது” என்று முத்தரசன் குற்றம் சாட்டினார்.
“எதிர்காலத்தில் காந்தி படம் உள்ள அலங்கார ஊர்தி வந்தாலும் கூட இவர்கள் அத்தனையும் நிராகரிப்பார்கள், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 26 ஆம் தேதி நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் ஒன்றிய அரசின் இந்த மோசமான செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.