Aran Sei

பொதுத்துறை நிறுவனங்களை விற்க ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு – நாடு முழுவதும் போராட்டம் நடத்த பி.எம்.எஸ் திட்டம்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவிற்கு  எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 15 முதல் நவம்பர் 11 வரை பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொள்ள, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொழிற்சங்கமான பாரதிய மஜ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைரதாபாத்தில் நடைபெற்ற பாரதிய மஜ்தூர் சங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“2021 பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் மீது மத்திய அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில், பாரதிய மஜ்தூர் சங்கத்தின் தேசிய நிர்வாகிகள் சென்னையில் விவாதித்ததற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பி.எம்.எஸ் தலைவர் எச்.ஜே.பாண்ட்யா, பொதுச் செயலாளர் பினாய் குமார் சின்ஹா ​​மற்றும் அமைப்புச் செயலாளர் பி.சுரேந்திரன் ஆகியோர், பொதுத்துறை நிறுவனத்தின் சொத்துக்களை விற்றல், தனியார்மயமாக்கல் மற்றும் பணமாக்குதல் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகளைப் பி.எம்.எஸ் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஒரு ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

இதற்கு முன்னர், பட்ஜெட்டில் வெளியிடப்பட்டிருந்த முதலீடு திட்டங்களை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார அமைப்பான சுதேசி ஜாகரான் மஞ்ச (எஸ்.ஜே.எம்) விமர்சித்திருந்தது.

போராட்டத்தின் முதல் கட்டமாக, மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரை தொழில் ரீதியாக கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக மே மாதத்தில், பகுதி அளவிலான பயிற்சி பட்டறைகள் மற்றும் மூன்றாம் கட்டமாக, ஜூன் 14 முதல் 20 வரையில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக பி.எம்.எஸ் தெரிவித்துள்ளது என தி இந்து கூறுகிறது.

நான்காவது கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி  ஆர்ப்பாட்டம் நடத்தவும்,  அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20 முதல் 30 வரை மாநில அளவிலான மாநாடுகளை நடத்தவும், ஆறாவது மற்றும் இறுதி கட்டமாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் கார்பரேட் அலுவலகங்களின் முன்பு ஆர்பாட்டம் நடத்தவும் பி.எம்.எஸ் திட்டமிட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்