செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து, ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இன்று (ஜூன் 02), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக மக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. பல மாத ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒருசில நிறுவனங்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி மருந்துகளை கண்டறிந்துள்ளன. ஆனால், மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில், அதிகளவிலான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.
“தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹெச்.எல்.எல் தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அதன்மூலம், அந்த ஆலையை இயக்குவதற்கான தொழில்நுட்பத்தைப் பெற்று, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற தென்மாநிலங்களுக்குமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.” என்று ஆர்.எஸ்.பாரதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“இதுகுறித்து, மத்திய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இதுகுறித்து ஆலோசித்து, மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். எனவே, இது தொடர்பாக ஆலோசிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும்.” என்று நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு ஆர்.எஸ்.பாரதி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.