Aran Sei

சட்டம் தெரியாத தமிழக சட்ட அமைச்சர் – ஆர்.எஸ்.பாரதி சாடல்

அதிமுக சட்ட அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை என்றால் சட்டத்துறை  மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் சக்ரபாணியின் மகனுக்குக் கல்குவாரி டெண்டர் வழங்கியதில் முறைக்கேடு நடந்துள்ளதால் அமைச்சர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். பொது ஊழியர்களுக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசின் டெண்டர் வழங்கக்கூடாது என்கிற விதியை சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார் ஸ்டாலின்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ” திமுக தலைவர் ஸ்டாலின் வானூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ மகன் பிரபு, கல் குவாரியை ஏலத்தில் எடுக்கக் கூடாது என எந்தச் சட்டமும் இல்லை. சட்டப்புலி மு.க.ஸ்டாலின் நுனிப்புல் மேயாமல் ஆவணங்களைக் கவனமாகப் படிக்க வேண்டும் ” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  பொது ஊழியர்கள் குறித்து ஊழல் தடுப்புச் சட்டமும் இந்தியத் தண்டனைச் சட்டமும் சொல்லவருவதைக் கவனமாக அமைச்சர் படிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி தெரியவில்லை என்றால் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ’டான்சி வழக்கில்,’ அரசு நிலத்தை முதலமைச்சர் வாங்கியதில் என்ன தவறு என்று கேட்டவர்கள்தான் அதிமுக வினர் என்றும் கீழமை நீதி மன்றம் ஜெயலலிதாவிற்குத் தண்டனை வழங்கியபோது அரசிடம் வாங்கிய நிலத்தைத் திருப்பிக் கொடுத்துதான் தப்பித்தார் என்றும்  ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார் .

“சட்ட அமைச்சருக்கு சட்டம் தெரியவில்லை என்றால் வீட்டில் ஒரு ‘போஸ்ட் பாக்ஸ்’ வையுங்கள். ஏலம் எடுத்த தொகை  ஆகியவை குறித்து சட்டம் படித்த வழக்கறிஞர்களிடம் ஏன் சட்டம் படிக்கும் மாணவர்களிடம் கூட கருத்துக் கேளுங்கள். உங்கள் “போஸ்ட் பாக்ஸில்” ஆயிரம் என்ன  லட்சம் கடிதங்கள் வந்து விழும்” என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்