கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் 935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது என்று ஊரக மேம்பாட்டுத் துறையின் கீழ் சமூக தணிக்கை ஆய்வுகள் வழியாகத் தெரியவந்துள்ளது.
மேலும், 2017-18 ஆம் நிதியாண்டிலிருந்து 2020-21 வரை முறைதவறி கையாளப்பட்ட இந்த 935 கோடியில் 12.5 கோடி ரூபாய், அதாவது 1.34 விழுக்காடு மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
நாடுமுழுதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராமங்களில் கடந்த 2017 ஆண்டிலிருந்து சமூக தணிக்கை அலகுகள் மேற்கொண்ட ஆய்வின் வழியாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த 2017-18 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக 55,659.93 கோடி ரூபாய் வழங்கியதாகவும், இது படிப்படியாக உயர்ந்து கடந்த 2020-21 ஆம் ஆண்டு 1,10,355.27 கோடியாக உயர்த்தப்பட்டது.
இதேபோன்று, செலவீனமும் 2017-18 ஆம் ஆண்டு 63,649.48 கோடியிலிருந்து, 2020-21 ஆம் ஆண்டு 1,11,405.3 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், லஞ்சம், அதிகவிலை கொடுத்து மூலதனப்பொருட்கள் வாங்கியது, கணக்கில் இல்லாத நபருக்குப் பணம் வழங்கியது போன்றக் காரணங்களால் நிதியானது முறைதவறிக் கையாளப்பட்டது சமூக தணிக்கை அலகின் ஆய்வு வழியாக வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டிலேயே அதிகப்பட்சமாகத் தமிழ்நாட்டில் 12,525 கிராமப்பஞ்சாயத்துகளில் 245 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது. இது 37,527 தணிக்கை அறிக்கைகளின் வழியாகத் தெரியவந்துள்ளது. மேலும் முறைதவறிக் கையாளப்பட்ட நிதியில் 2.07 கோடி அதாவது வெறும் ௦.85 விழுக்காடு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு அதிகாரி இடைநீக்கம் செய்யபட்டுள்ளார். இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ஆனால் ஒருவர் மீதும் ஒரு முதல் தகவல் அறிக்கைக் கூட பதியப்படவில்லை.
இதேவேளையில் ராஜஸ்தான், கேரளா, அருணாச்சலப் பிரதேசம், கோவா, லடாக், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, புதுச்சேரி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்த நிதியும் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
தொடர்புடைய பதிவுகள்:
‘தவறாக பயன்படுத்தப்படும் உபா சட்டம்’: பாதிக்கப்படும் காஷ்மீர் பெண்கள் – ஆமீர் அலி பட்
நூர்ந்தும் அவியா ஒளி – தோழர் ப. ஜீவானந்தம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.