பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, செயல்பாட்டாளர் ரோனா வில்சனின் கம்ப்யூட்டர், 22 மாதங்கள் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததை, அமெரிக்காவை சேர்ந்த அர்சனல் கன்சல்டிங் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், ரோனா வில்சனுக்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்துள்ள ஆதாரம், பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோனா வில்சனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர் ஹாட்டிஸ்க்கின் மற்றொரு பிரதி (Clone), அமெரிக்காவில் உள்ள மிண்ணணு தடயவியல் ஆய்வு நிறுவனமான, அர்சனல் கன்சல்டிங் நிறுவனத்திடம் ஆய்வு செய்வதற்காக கொடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கம், இந்த ஏற்பாட்டை செய்ததாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.
ஹார்ட்டிஸ்க்கை ஆய்வு செய்த அந்த நிறுவனம், ரோனா வில்சன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுமார் 22 மாதங்கள், அவருடைய கம்ப்யூட்டரை, ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தை கண்டுபிடித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோனா வில்சனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த, “அனதர் விக்டரி” (anothervictory.rar) என்ற இணைப்பை (File), அவர் திறக்க முற்பட்டபோது, ஹேக்கர் அனுப்பிய மால்வேர் (Malware) என்று அழைக்கப்படும் தீய மென்பொருள், அவருடைய கம்ப்யூட்டருக்குள் நுழைந்தது என்று, அர்சனல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
தி இந்து செய்தியின் படி, 2016 ஜூன் 13ஆம் தேதி ரோனா வில்சனின் கம்ப்யூட்டரை, ஹேக்கர் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, ரோனா வில்சனுக்கு தெரியாமலேயே அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்ததுடன், சில கோப்புகளையும் அவருடைய கம்ப்யூட்டரில் பதிவேற்றியுள்ளார்.
2016, நவம்பர் 3 ஆம் தேதி, ‘கேபேக்கப்’ (kbackup) என்ற பெயரில், ஒரு ஃபோல்டரை (Folder) உருவாக்கியுள்ள ஹேக்கர், பிறகு அதற்கு ‘ஆர்பேக்கப்’ (Rbackup) என்று பெயர் மாற்றம் செய்து, அதை கண்டுபிடிக்க முடியாத வகையில் கம்ப்யூட்டரில் மறைத்து வைத்ததாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தி இந்து கூறுகிறது.
ரோனா வில்சனின் வீட்டை காவல்துறை சோதனை போடுவதற்கு முந்தை தினம் (ஏப்ரல் 16, 2018), மாலை சுமார் 4.50 மணிக்கு, ‘ஆர்பேக்கப்’ என்ற அந்த ஃபோல்டர் கடைசியாக திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு மறுநாள் வில்சனின் வீட்டிலிருந்து அவருடைய கம்ப்யூட்டர் உட்பட சில ஆவணங்கள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018, ஜூன் 6ஆம் தேதி, பீமா கேரேகான் வழக்கில் ரோனா வில்சன் கைது செய்யப்பட்டார். அவருடைய கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கை சோதனையிட்டதில், ரோனா வில்சனுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)) தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், மாவோயிஸ்ட்டுகள் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரோனா வில்சனின் கம்ப்யூட்டரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், “மற்றொரு, ராஜீவ் காந்தியை போன்றதொரு நிகழ்வு” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பாக, ரோனா வில்சன் இந்த வழக்கில் அருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ள மற்ற நபர்களான சுரேந்திரா கட்லிங், மகேஷ் ரவுத், ஷோமா சன், சுதீர் தாவாலே, அருண் ஃபெரேரா, வெர்னான் கொன்சால்வஸ், சுதா பரத்வாஜ் மற்றும் வரவர ராவ் உட்பட 15 பேருடன், சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது, அர்சனல் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யக் கோரி, ரோனா வில்சன் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.