Aran Sei

சிபிஐ முன்னாள் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமனம் – குடியரசுத் தலைவர் உத்தரவு

நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தவிட்டுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டு ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என்.ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்.என்.ரவி 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்.என். ரவி, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார்.

ஒன்றிய அரசின் உளவுப்பிரிவான இந்திய உளவுத் துறையிலும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இணை உளவு குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தற்போது தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே நாகாலாந்து ஆளுநராக ஜகதீஷ் முகி, உத்தரகாண்ட் ஆளுநராக குர்மீத் சிங் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

புதிய ஆளுநர் நியமனம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என்று வரவேற்றுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்