Aran Sei

மகாத்மா காந்தியை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜ் – விடுவிக்க கோரி பஜ்ரங் சேனா போராட்டம்

காத்மா காந்தியை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட காளிச்சரண் மகாராஜை விடுதலைச் செய்யக் கோரி, வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

அண்மையில், சத்திஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த தர்ம சன்சத் என்ற இரண்டு நாள் இந்து மதக்கூட்டத்தில் இந்து சாமியாரான அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மகாராஜ் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியின்போது பேசிய காளிசரண் மகாராஜ் மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரைக் கொலைச் செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

இதையடுத்து, அவர் மீது ராய்பூரில் காவல்நிலையத்தில் வழங்குப்பதிவு செய்யப்பட்டது.

காளிசரண் மகாராஜின் கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தேசத் தந்தையை அவதூறாகப் பேசியதன் வழியாக சமூகத்தில் நஞ்சைப் பரப்பி தனது நோக்கத்தில் வெற்றிபெற முடியும் என்று ஒரு நயவஞ்சகர் நினைத்தால், அது அவருடைய மாயையே என்று விமர்சித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் 30ஆம் தேதி, மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் காளிசரண் மகாராஜ் ராய்ப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று(ஜனவரி 2), மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி சிலை முன்பு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு எதிராகவும், நாதுராம் கோட்சேவை புகழ்ந்தும் முழக்கங்களை எழுப்பி வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தள உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

இப்போராட்டம் குறித்து பேசியுள்ள பஜ்ரங் சேனாவின் தலைவர் சந்தீப் குஷ்வாஹா, “காளிசரண் மகராஜ் எந்த தவறும் செய்யவில்லை. அனைவருக்கும் தெரிந்ததை மட்டுமே பேசினார். அவர் பேசியது உண்மைதான். காந்தி என்ன செய்தார்? சுழலும் சக்கரத்தை சுழற்றினால் சுதந்திரம் கிடைத்திருக்குமானால், அனைவருமே அதைச் செய்திருப்பார்கள். பகத்சிங்கின் தியாகத்தால்தான் சுதந்திரம் கிடைத்தது. சக்கரத்தை சுழற்றி யாரும் சுதந்திரம் வாங்கவில்லை” என்று கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ஆகியோருக்கு அனுப்பப்பட்ட  மனுவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய சிங், மணிசங்கர் ஐயர் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும் அவர்கள்மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து, காளிசரண் மகராஜை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்