Aran Sei

உயர்ந்துள்ள சில்லறைப் பணவீக்கம் – நீடிக்கும் அபாயம் உள்ளதா?

Image Credits: Times Of India

ணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பையடுத்து, நாட்டின் சில்லறைப் பணவீக்கம் அக்டோபா் மாதத்தில் 7.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 6.5 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கான உயர்வு என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை பணவீக்கத்துக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உயர் வரம்பைவிட இது அதிகமாக உள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (சிபிஐ) தரவுகளின்படி, இந்த ஆண்டு, செப்டம்பரில் சில்லறை பணவீக்கம் 7.27% ஆக இருந்தது.

சில்லறை பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதம், 7%-ஐ விட அதிகமாக உள்ளது. இதற்கு முன் அதிகபட்சமான சில்லறை பணவீக்கம் 2014-ம் ஆண்டு, மே மாதத்தில் 8.33% ஆக இருந்தது.

புள்ளிவிவரத்தின்படி, நுகர்வோர் உணவுப் பொருள்களுக்கான விலை குறியீட்டெண் (சிஎஃப்பிஐ) செப்டம்பரில் 10.68 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 11.07 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2019-ம் ஆண்டு, அக்டோபரில் 4.62% ஆக இருந்தது.

வருடாந்திர நிலவரத்தின் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் காய்கறி விலை 22.51% உயர்ந்துள்ளது. புரதம் நிறைந்த இறைச்சி மற்றும் மீன்களின் பணவீக்கம் 18.70% உயர்ந்துள்ளது, முட்டைகளில் இது 21.81% ஆக அதிகரித்துள்ளது. செப்டம்பரில், இறைச்சியின் பணவீக்கம் 17.60% ஆகவும் முட்டைகளின் பணவீக்கம் 15.47% ஆகவும் இருந்தன.

‘எரிபொருள் மற்றும் மின்சார’ பிரிவில், செப்டம்பர் மாதத்தில் 2.87 சதவீதமாக இருந்த பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 2.28 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே போல், ‘பால் மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின்’ பணவீக்கமும் செப்டம்பர் மாதத்தில் 5.64 சதவீத்திலிருந்து அக்டோபர் மாதத்தில் 5.20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

முன்னதாக, முக்கிய கொள்கை விதியின்படி, ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தை 4% (+/- 2%) ஆக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாகப் பேசிய, முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனனத்தை (ஐசிஆர்ஏ) சேர்ந்த பொருளாதார வல்லுனரான அதிதி நாயர், “காய்கறி விலை குறைவால் இந்த மாதம் பணவீக்கம் குறையக்கூடும். இது 2020-ம் ஆண்டு, டிசம்பரில் 6%-ஐ விடவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளதாக ‘தி வயர்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூத்த பொருளாதார நிபுணர் தேவேந்திர குமார் பந்த், “2021-ம் நீதியாண்டின் 3-ம் காலாண்டில் பணவீக்கம் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. குளிர்காலம் தொடங்கி புதிய வெங்காய பயிர் வருவதால் உணவு பணவீக்கம் குறையக்கூடும். இருப்பினும், முக்கிய பணவீக்கம் 2021-ம் நீதியாண்டில் உயரும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பணவீக்கத்தின் உயர்வு கவலைக்குரியது. இதனால், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் பாதிக்கப்படும். ஆனால், 2021-ம் நிதியாண்டில் பணவீக்கம் குறையும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்