Aran Sei

தமிழ்நாடு அரசின் நீட் எதிர்ப்பு, மக்கள் பள்ளி திட்டம் – ஆதரவு தெரிவித்து தமுஎகச மாநிலக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு கோரும் தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்பதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றம், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் சட்ட முன்வரைவினை ஒருமனதாக நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதை தமுஎகச வரவேற்கிறது. சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள இந்தச் சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் மக்கள் மன்றமும் அணிவகுத்து நிற்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணமிது. எனவே, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் சட்டமுன்வரைவுக்கு தாமதமின்றி ஒப்புதல் வழங்குமாறு ஆளுநர், ஒன்றிய அரசு மற்றும் குடியரசுத்தலைவரை வலியுறுத்தி மாநிலம் முழுவதுமுள்ள மக்கள் பங்கேற்கும் மனிதச்சுவர் இயக்கத்தை நடத்துவதற்கான அறைகூவலை விடுக்குமாறு தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறித்துவ வன்னியர்களின் உரிமைக்கு எதிரான படமா ருத்ர தாண்டவம்? – சந்துரு மாயவன்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவல்- பொதுமுடக்கம் காரணமாக கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் ‘மக்கள் பள்ளி’ என்கிற திட்டத்தைப் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த முன்வந்திருப்பதற்கு தமுஎகச தனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. அறிவொளி இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு திறம்பட தொண்டாற்றிய தன்னார்வலர்களை இந்த மக்கள் பள்ளி திட்டத்திலும் இணைத்துக்கொள்வதன் மூலம் இத்திட்டம் அதன் இலக்கினை எளிதில் அடைய முடியும். அத்துடன், இதற்கான பரப்புரைக்காக மாநிலம் முழுவதுமுள்ள தகுதிவாய்ந்த நாட்டுப்புறக்கலைஞர்களையும் நிகழ்த்துக்கலைஞர்களையும் பயன்படுத்த வேண்டும். அடுத்தடுத்த கொரானா பொதுமுடக்கங்களால் கலை நிகழ்வுகளை நடத்த இயலாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள இக்கலைஞர்கள் தமது இயல்பான கலைச்செயல்பாட்டிற்குத் திரும்ப இது நல்வாய்ப்பாக அமையும் என்பதை கவனம் கொண்டு தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்வதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ( பொறுப்பு ) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் தீர்மானம் வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்