தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். மேலும், வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதுள்ள வழக்கையும் தமிழ்நாடு அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி நாடு தழுவிய போராட்டத்தில் விவசாயிகள் போராட்ட்த்தில் ஈடுபட்டு வருகிறனர். டெல்லி எல்லையில் பல மாதமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அளவிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மூன்று சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களும் உள்ளன. மண்ணையும், விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்று எழுச்சிமிகு போராட்டம் நடந்ததில்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. வியர்வைச் சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஏழாவது மாநிலமாக தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.