கடனில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவை (நிர்வாகத்தை) மாற்றியமைத்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. திறமையற்ற நிர்வாகமே இதற்கு காரணம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு, அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவனம், வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (என்பிஎஃப்சி) பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அந்நிறுவனம் காப்பீடு, சொத்து மேலாண்மை, வணிகம், தொழில்துறை போன்றவற்றிற்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான கணக்கின்படி மட்டும், இந்நிறுவனம் ரூ 1,156 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து திரும்ப பெற முடியாதது, தவறான துறைகளில் முதலீடு செய்தது, வணிக துறைகளுக்கு நிதி வழங்கியது போன்றவைதான் பெரும்பான்மையான நஷ்டத்துக்கு காரணம் ஆகும். இந்நிறுவனத்தின், தற்போதைய மொத்த சொத்து விவரம் ரூ, 79,031 கோடி ரூபாய் ஆகும்.
1934 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட, இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் (111B) படி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை மேற்பார்வையிடும் மற்றும் வழிநடத்தும் பொறுப்பு இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரிலையன்ஸ் கேபிடல் விவகாரத்தில் தலையிட்டுள்ள ரிசர்வ் வங்கி, ”ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடனை உரிய நேரத்தில் சரியாக திருப்பி செலுத்தவில்லை, அந்நிறுவனமும் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. இந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய, ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே, ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவத்தின் இயக்குநர்கள் குழுவை மாற்றியமைக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்ட்ரா வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர், ஒய்.நாகேஷ்வர ராவை ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவனத்தின் தலைவராக நியமித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திவால் சட்டத்தின் மூலம் (Insolvency Bankruptcy Code) ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவனத்தின் பிரச்சனை தீர்த்து வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திவால் சட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது வங்கி அல்லாத நிதி நிறுவனம் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடட் நிறுவனமாகும். இதற்கு முன்னர் திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன் (DHFL) நிறுவனம் மற்றும் எஸ்ஆர்இஐ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபினான்ஸ் லிமிடட் நிறுவனங்கள் திவால் சட்டத்தின் கீழ் ‘திவால்’ ஆனதாக அறிவிக்கப்பட்டன.
Source: Bloomberg Quint
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.