Aran Sei

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் – எழுந்து நிற்க முடியாது என வாக்குவாதம்

சென்னை ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுத்து இருக்கையிலேயே அமர்ந்துள்ளனர்.

இது சம்பந்தமாகக் கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் “தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது” என்று ரிசவ் வங்கியின், தென் மண்டல துணை பொது மேலாளர் ஜெயபாரதி கண்ணன் கூறும் வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னையில் நடைபெற்ற தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுடன் தொடர்புடைய வழக்கு ஒன்று, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் “தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல்தானே தவிர, தேசிய கீதம் அல்ல. ஆகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை” என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், “தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (26.01.22) சென்னை ரிசர்வ் வங்கி அலுவகத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி உட்பட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை.

நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து பத்திரிகையாளர்கள் ரிசவ் வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்ற மரியாதை செய்யத்தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறியது வீடியோவில் பதிவாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு ரிசவ் வங்கி அதிகாரிகள் பதில் அளிக்காமல் அங்கிருந்து கலைந்து செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி “ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காதது கண்டனத்திற்கு உரியது, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காததைக் குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில், காணொளி ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும்” எனச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்