திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையைக் கடைபிடிக்கப்படாமல் மத்திய அரசின் முறையைக் கடைபிடித்து, பேராசிரியகள் பணியை நிரப்பிய உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது ஒவ்வொரு துறையையும் ஓர் அலகாகக் கருதியே 69 விழுக்காடு இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு” என்று தமிழகத்தின் முறையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை சிதைக்கும் வகையில், உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா முயன்றது கண்டனத்துக்குரியது என்றும் சமூக நீதிக்கு எதிராக செயல்பட்ட அபூர்வாவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனங்களைத் தெரிவித்திருப்பது வரவேற்கதக்கது என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற சொல்லே இடம் பெறாதது ஏன்? – சீதாராம் யெச்சூரி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 2019 ஜூலை 8ம் தேதி வெளியிட்ட ஆள் தேர்வு அறிவிக்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், 28 துறைகளில் காலியாக இருந்த 54 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அறிவிக்கையில், ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஓர் அலகாக கருதப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை நினைவுபடுத்தினார்.
“பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாநிலப் பல்கலைக்கழகம் என்பதால் மாநில அரசின் கொள்கைதான் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா மாநில அரசின் ஒப்புதலைப் பெறாமல், பாரதிதாசன் பல்கலை. பணி நியமனத்தில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையை கடைபிடிக்க அபூர்வா ஆணையிட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரானது” என்றும் கூறியுள்ளார்.
உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா யாருடனும், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், சமூகநீதி சார்ந்த அரசின் நிலைப்பாட்டை மாற்றுகிறார் என்றால், அது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் செயலென்று வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சின்னப்பம்பட்டி டூ சிட்னி – கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அவசியமா? – நவநீத கண்ணன்
”இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், உயர் கல்வித் துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது” என்றும் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு சமூகநீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவை உயர்கல்வித்துறை செயலாளர் பதவியிலிருந்து அரசு நீக்க வேண்டும் என்றும் சமூகநீதி சார்ந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றும் அதிகாரத்தை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தந்தது யார் என்பது குறித்து, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.