Aran Sei

நினைவிடமா பூங்காவா – ஜாலியன் வாலாபாக்கில் வலதுசாரி கருத்தியலைத் திட்டமிட்டு புகுத்துகிறதா பாஜக?

ஜாலாயன்வாலாபாக் நினைவு சின்னத்தைப் புதுப்பிக்கப்பட்டதில் நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வெளிவருகையில் தியாகிகளின் புரட்சிகர கடந்த காலங்களை வேண்டுமென்றே திரிக்க முயற்சிகள் செய்யப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அங்குச் செய்யப்பட்ட பல மாற்றங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒன்று தியாகி உதம்சிங்கின் சிலை. இது மூன்றாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. ஆனால் அந்த இடம் புதுப்பிக்கப்பட்டப் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதால் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்தச் சிலை 2018 ஆம் ஆண்டு கம்போஜ் மகாசபையால் நிறுவப்பட்டது. அதனை அப்போது  ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.  உதம்சிங் காம்போஜ் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அந்த வெங்கலச் சிலையில் உதம்சிங்கின் கையில் அவரது அடையாளச் சின்னமான துப்பாக்கிக்குப் பதில் மண் இருப்பது போல் செய்யப்பட்டுள்ளது. அவருடைய தலைப்பாகையும் தளர்வாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிவிரைவாகப் பரவியதால் அடையாளச் சின்னமான துப்பாக்கி இல்லாதது அனைவரது புருவங்களையும் உயர்த்தச் செய்துள்ளது. இப்படி துப்பாக்கி இல்லாமல் சிலையைச் செய்ய வேண்டும் என்பது யாருடைய முடிவு? அகில இந்திய காம்போஜ் மகாசபையின் கூற்றின்படி, இதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு என்கிறது. பல பத்தாண்டுகளாக உதம்சிங்கின் சிலையை நிறுவ வேண்டும் என்பது அவர்கள் கனவு. அதனால் வாய்ப்பு கிடைத்தால் அரசின் விருப்பத்திற்கிணங்க அதை வடிவமைக்கத் தயாராக இருந்தனர்.

தி வயருடன் பேசிய அகில இந்திய காம்போஸ் மகாசபை யின் முன்னாள் தலைவர் நானக் சந்த் காம்போஜின்  மகனான விக்ரம் காம்போஜ்,” ஜாலியன்வாலாபாக்கில் உதம் சிங்கின் சிலையை நிறுவ எனது தந்தைக்கு முப்பது ஆண்டுகள் ஆகின. அவர் முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் பல கடிதங்களை எழுதி உள்ளார். ஆனால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக மட்டுமே எங்களுக்குப் பதில் வந்தது. இறுதியாக, எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே சொந்தமாக சிலை செய்வதாக அறிவித்தவுடன், அரசு உதம் சிங்கை கையில் துப்பாக்கி வைத்திருப்பது போல் காட்டக் கூடாது, ஏனெனில் அது தவறான செய்தியைக் கொண்டு சென்றுவிடும் என்று கூறியது. எனவே எங்கள் சமூகத்தினர் உதம்சிங்கின் கையில் மண் இருப்பது போல செய்வதே அறிவுபூர்வமானது என நினைத்தனர். ஏனெனில் உதம்சிங் அந்த மண்ணைக் கையில் எடுத்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் பழி வாங்கப் போவதாக உறுதி ஏற்று, லண்டனில் காக்ஸ்டன்  அரங்கில் அன்றைய பஞ்சாப் ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ டையரை சுட்டுக் கொன்றார். அந்த டயர்தான் ஜாலியன்வாலாபாக்கிற்குள் துருப்புக்களை அனுப்பியவர்,” என்று விளக்கினார்.

அரசு உதம்சிங்கை கதாரியத்தவராக (Gadarist) பார்த்தது. அவர் கத்தார் இயக்கத்தில் சேர்ந்து பின்னர் புரட்சிகர சுதந்திர போராளியாக மாறியவர் என்று கூறும் விக்ரம்,” அதனால்தான் புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட ஜாலியன்வாலாபாக்கில் உதம்சிங், பகத்சிங் இன்னும் மற்றவர்களின் பெயருக்கு முன்னால் “தியாகி” என்ற பட்டம்  இருப்பதை நீங்கள் காண முடியாது. உண்மையில் எனது தந்தை நாடாளுமன்றத்தில் உதம்சிங்கின் சிலையை நிறுவ வேண்டும் என ஒவ்வொரு தலைவரையும்  அணுகினார். எனினும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும்  உதம்சிங், பகத்சிங் மற்றும் பலரைப் தியாகிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வரும் போது இரட்டை வேடம் போடுவதே இதற்குக் காரணம்,” என்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் விக்ரமின் சகோதரர் தீபக் காம்போஜ், உதம்சிங் சிலையில் தவறு இருப்பதை ஏற்றுக் கொண்டாலும் வேறு வழி இல்லை என்கிறார். ” பாபி காம்போஜ் என்பவர்தான் இந்த நிலையைச் செய்தவர். புதிய சிலையைச் செய்ய எங்களிடம் உண்மையான புகைப்படங்கள் உள்ளன. ஆனால் அரசு அவரைத் தியாகியாகவே கருதாதபோது அதை மாற்ற  யாரால் முடியும்,” என்று கேட்கிறார்.

வரலாற்றைச் சிதைக்க முடியாது என்று கூறும் தீபக்,  சுதந்திரத்திற்காக உயிரை ஈந்த அனைவரையும் “தியாகிகள்” என்றே அழைக்க வேண்டும். எங்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை என்றும், தங்கள் குழு, உதம் சிங்கின் வீர மரபுக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அரசியல் சார்பற்ற குழு என்றும் கூறினார். நானக் சந்தின் முயற்சியால்தான் இங்கிலாந்திலிருந்து உதம்சிங்கின் சாம்பல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நானக் சந்த் பஞ்சாப்பின்  கபூர்தலா மாவட்டத்தில் சுல்தான்புர் லோகி  சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் சாது சிங் தின்ட் என்பவரை அணுகினார்

அவர்தான் 1974 ல் உதம்சிங்கின் சாம்பல் கொண்டு வரப்படுவதற்கு உந்துதலாக இருந்தார். நானக் சந்த் 2016ல் இறந்து விட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் பரிந்துரைகள்

தியாகிகளின் குடும்பத்தினர் சார்பாக, ஜாலியன்வாலாபாக் சுதந்திர போராட்ட வீரர்களின் அறக்கட்டளையின் தலைவர் சுனில் கபூர் ஒன்றிய கலாச்சார அமைச்சகச் செயலர், ராகவேந்திர சிங்கிற்கு  ஜாலியன்வாலாபாக் புனரமைப்பு குறித்து பல பரிந்துரைகள் அடங்கிய ஒரு கடிதத்தை எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், நுழைவாயிலில் உள்ள சுவரோவியங்களை அகற்றிட வேண்டும், அதே இடத்தில் அந்தத் தெருவின் முன்னால் உள்ள “தியாகிகள் தீபத்தை”(அமர்ஜோதி) மறுவடிவமைப்புச் செய்ய வேண்டும், முன்னர்   “தியாகிகள் கிணறு” இருந்த இடத்தை  அனைத்து மதத்தினரும் வந்து வணங்கும் இடமாக மாற்றி, ஆதி கிரந்தம், பகவத் கீதை, புனித குரான் மற்றும் பைபிள் ஆகியவற்றை தியாகிகளின் நினைவாக வைத்து மேலும் சிறப்பாக வடிவமைக்க வேண்டும் போன்ற 11 பரிந்துரைகளை அளித்திருந்தார். மேலும் தியாகிகளின் வாரிசுகளுக்குத் தாமிர பட்டயமும், சான்றிதழ்கள் மற்றும் பிற வசதிகளைச் செய்து தருவதுடன், ஜாலியன்வாலா பாக் வளாகத்தில் எந்த உணவையும் அருந்த தடை விதிக்க வேண்டும் என்றும்  கபூர் கோரியிருந்தார். “நாங்கள் அரசாங்கத்திடம் உதம்சிங், பகத்சிங் மற்றும் அனைத்து ஜாலியன்வாலாபாக் நிகழ்வில் உயிர்நீத்தவர்களது பெயருக்கு முன்னால் ” தியாகி” என்ற பட்டத்தைச் சேர்க்க வேண்டும் என்றும், ” தியாகிகளின் சுவர்” ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் உருவப்படங்களுடன் அவர்களுடைய கதைகளைக் விளக்குவதாகவும் இருக்க வேண்டும் என்றும், ஜெனரல் டயர் எங்கு நின்று ஆயிரக்கணக்கான மக்களைச் சுட்டுக் கொன்றானோ அந்த மேடை-“Pillor of Shooting” – மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் குடும்பத்தினரை ‘ ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளையிலும்’, அது தொடர்பான குழுக்களிலும் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒளி,ஒலி படக்காட்சியும் அந்த வளாகத்தின் ஏதாவது ஒரு இடத்தில் காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கோரி உள்ளார்.

மோடிக்குக் கடிதம்

கத்தார் இயக்கத்தின் பாரம்பரியத்தைக் பாதுகாக்க உருவாக்கப்பட்ட  ஜலந்தரைச் சேர்ந்த  ஒன்பது பேரைக் கொண்ட ‘தேசிய பகத் நினைவு குழு’  ஜாலியன்வாலா பாக்கிற்கு

தாங்களே நேரடியாகச் சென்று அதை புனரமைக்கப்பட்டபோது செய்த மாற்றங்களைக் கண்டனர். அவர்கள் அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துத் தங்கள் கோபத்தையும், மனக்கசப்பையும் பதிவு செய்து, அதனை அதன் பழைய வடிவத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உள்ளனர்.

நினைவிடத்தை பார்வையிட்ட தேசிய பகத் நினைவுக் குழுவின் தலைவர் அஜ்மீர் சிங்கும், குழுவின் பொதுச்செயலாளர் குர்மித் சிங்கும், பிரதமர், ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைவர், இந்திய குடியரசுத் தலைவர், கலாச்சார விவகார அமைச்சகச் செயலாளர் மற்றும் பஞ்சாபின் முதல்வர் ஆகியோருக்கு எழுதி உள்ள கடிதத்தில், அந்த நினைவிடத்தில் செய்துள்ள தவறுகளை எடுத்துக் காட்டி உள்ளனர். ஜாலியன் வாலாபாக் வரலாற்றுடன் விளையாடிய பேரழிவின் வெளிச்சத்தில், இங்கே செய்துள்ள தவறுகளைச் சரி செய்ய முக்கிய வரலாற்றாசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

தேசிய பகத் நினைவு குழு போன்ற பொது அமைப்புகள் இது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். அரசால் அழகுபடுத்துவது என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புனரமைப்புப் பணி அதன் பாரம்பரிய மதிப்பை,  ஒரு பொழுது போக்கு இடம் என்ற அளவில் குறைத்து விட்டது என அவர்கள் கவலை தெரிவித்தனர். ஜாலியன் வாலாபாக்கில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி கூறுகையில் அதன் உறுப்பினர்கள், வாயிலில் சுவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஒழுங்கு முறைச் சட்டத்தற்கு எதிராக குரலெழுப்பிய ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த இடம் இது என்பதை நினைவு படுத்துவதற்குப் பதிலாக ஒரு விழாவை நினைவுபடுத்துவது போல் உள்ளது.  அதைப் போலவே, இருநூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரைத் தியாகம் செய்த கிணறு, தற்போது பகலிலும் கூட எதுவும் தெளிவாக தெரியாத அளவு கண்ணாடிச் சுவர்களால் மறைக்கப்பட்டிருப்பதால் அது அரசுக்கு எதிரான கோபத்தைத் தூண்டும் உணர்வை வெளிப்படுத்தவில்லை. ஆங்கிலேயப் படை நின்று  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இடம் கூட அழிக்கப்பட்டு, அங்கு ஒரு சாதாரண தரை ஓடு மட்டுமே பதிக்கப்பட்டுள்ளது. முன்பு அந்த இடத்தில் ஒரு பிரமிடு போன்ற அமைப்பு இருந்தது.

தேசிய பகத் நினைவுக் குழுவின் கலாச்சாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமோலோக் சிங்,” வரலாற்றை அழகுப்படுத்த முடியாது என்பதும் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் இந்த அரசுக்கு நிச்சயமாகத்  தெரியாது. புதிதாகப் புனரமைக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம் மக்களுக்கு உணர்வூட்டுவதாக இல்லை. நகைக்கும் முகங்கள் வரையப்பட்டுள்ள சுவரோவியங்கள், ஒலி, ஒளி காட்சியிலிருந்து 62 முஸ்லீம்களின் பெயர்களை நீக்கியுள்ளது, புதிதாக கட்டப்பட்டுள்ள தாமரைக் குளம், வாயிலில் ஜாலியன் வாலாபாக் என்பதை முதலில் இந்தியிலும் அடுத்து பஞ்சாபியிலும் எழுதி இருப்பது ஆகியவற்றின் மூலம் பாஜக வலது சாரி கருத்தியலை திணிக்க முயற்சிப்பதை ஒருவர் தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். கத்தார் கட்சியின் கொடியின் வண்ணத்தையும் கூட மாற்றி உள்ளார்கள். ” நல்வாய்ப்பாக நன்றி கூறும் வகையில் குண்டுகள் பாய்ந்து சுவர்களை அப்படியே பாதுகாத்துள்ளனர். ஆனால் அவையும் அவை ஏற்படுத்திய தாக்கங்களை வெளிப்படுத்தாத வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.

குழு  வரலாற்றுப் பெருமைமிக்க ஒரு நினைவிடத்தை வெறும் சுற்றுலா இடமாக  மாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் அவ்வப்போது தடுத்திட வேண்டும். என்று கோரும் அவர், “ஆனால் எங்கள் எல்லா முயற்சிகளுக்குப் பின்னும் மோடி அரசு தனது நிகழ்ச்சி நிரலை நீட்டிக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளது,” எனகிறார் அமோலோக் சிங்.

 

www. thewire.in  இணைய தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

எழுதியவர் : குசும் அரோரா

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்