Aran Sei

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

29 ஆண்டிற்கும் மேலாகச் சிறையில் இருக்கும் எழுவரை விடுதலை செய்ய வேண்டி அரசியல் இயக்கத் தலைவர்கள் திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்டோரும் திரைத் துறையைச் சேர்ந்த பி.சி.ஸ்ரீராம் ,பிரகாஷ்ராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்டோரும்  கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன்,முருகன்,நளினி உள்ளிட்டோரை விடுதலைச் செய்ய வலியுறுத்தி நேற்று பாடல் வெளியிடப்பட்டது.

“தாய் மனம் ஏங்குது விடுதலை வேண்டுது தாமதம் சரிதானா”  எனத் தொடங்கும் இந்தப்பாடலைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பாரதிராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், அமீர், ரோகிணி, விஜய் ஆண்டனி,  சத்யராஜ், ராம் , பா.இரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ், ராஜுமுருகன், மாரி செல்வராஜ், நவீன், பொன்வண்ணன் ஆகியோர் வெளியிட்டிருந்தார்கள்.

எழுவரை விடுதலை செய்யக்கோரி தமிழகம் முழுக்க ஆதரவுக்குரல் எழுந்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தோர் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்

”நிரபராதி விடுதலைக்காக 72 வயது தாயின் அயராத 30ஆண்டுகால போராட்டம். நீதியின் போராளி அற்புதம் அம்மாளின் குரலுக்கு நாமும் வலுசேர்ப்போம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

”பேரறிவாளன் குற்றமற்றவர் என விசாரணை அதிகாரி கூறிவிட்டார்; விடுதலைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது. அமைச்சரவையும் பரிந்துரைத்து விட்டது. ஆனாலும் பேரறிவாளனை விடுதலை செய்ய மறுப்பது அநீதி. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார் .

 

”மேதகு ஆளுநர் அவர்களே! உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்குங்கள்! ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்.” என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கருத்துத்தைப் பதிவிட்டுள்ளார் .

 

“உச்சநீதிமன்ற அதிருப்ப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கள்ள மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டி கருத்துக்களக் கூறியுள்ளனர்.

முப்பது வருடங்களாகப் போராடுபவர்கள் வாழ்வில் ஒளி கிட்டட்டும் என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தன்னுடைய எண்ணத்தைப் பதிவிட்டுள்ளார்.

 

“தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

”அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்” என்று நடிகர், இயக்குனர் பார்த்திபன் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார் .

 

“சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி” என்று இயக்குனர் பா.ரஞ்சித் பேரறிவாளன் விடுதலைக்குத் தன் குரலைப் பதிவு செய்துள்ளார்.

”30 ஆண்டுகளாக தனது மகனை மீட்க அந்த அம்மா மிகவும் போராடி வருகிறார். செய்யாத குற்றத்திற்காக, இத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதே அதிகம் இப்போதாவது அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  பதிவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

”அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக” என்று இயக்குனர் சமுத்திரகனி கூறியுள்ளார்

ஒரு நிரபராதிக்கான நீதி வேண்டுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர், இந்தச் சாதனையையும் செய்து முடிக்க வேண்டும் என்று இயக்குனர் நவீன் பதிவிட்டுள்ளார்.

“7 பேர் விடுதலை விவகாரத்தில் நிச்சயம் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

#ReleasePerarivalan என்கிற ஹாஷ்டேக் பயன்படுத்தி குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்