Aran Sei

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” – எனக்கூறி UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மாணவப் போராளிகளை சென்ற ஜூன் 15 (2021) அன்று டெல்லி உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது மோடி அரசுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாஜக அரசு அடுத்த நாளே உச்சநீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.. ஜூன் 18 அன்று உச்சநீதிமன்றம் இரு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றத் தீர்ப்பை அனுமதித்துள்ளது. முழு விவரங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.

ஷாஹின்பாத்தில் நடந்த குடியுரிமைச் சட்ட (CAA) எதிர்ப்புப் போராட்டம்

பா.ஜ.க அரசு தனது குடியுரிமைச் சட்டத்தை (CAA) அமுல் படுத்தத் தொடங்கியவுடன் இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளும், இஸ்லாமியர்களும் அதற்கு எதிராகப் போராடினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசான இந்தியாவில் இவ்வாறு ஒருகுறிப்பிட்ட மதத்தவரை (இஸ்லாமியர்கள்) ஒதுக்கிவிட்டு மற்ற மதத்தினருக்கு மட்டும் குடிஉரிமை தொடர்பான சில சலுகைகளை அளிப்பதை ஏற்க இயலாது என்பது போராடிய ஜனநாயக சக்திகளின் கவலையாக இருந்தது. நவீன அரசமைப்பில் குடியுரிமை என்பது உயிருக்குச் சமமானது. ஒருவர் குடியுரிமை இல்லாதவராக்கப்பட்டால் அவருக்கு உயிர்வாழும் உரிமை உட்பட எந்த உரிமைகளுக்கும் உத்தரவாதமில்லாமல் போய்விடுகிறது. ஏற்கனவே அசாமில் இதன் செயல்பாடு தொடங்கி குடியுரிமை அற்றவர்களாக ஒதுக்கப்படுவோரை அடைத்து வைக்க முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிவோம். இந்நிலையில் இந்தியா முழுவதும் இக் கொடுஞ் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடங்கின. இதில் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்தியா முழுவதும் நடந்த இந்தப் போராட்டங்கள் நூறு சதம் அமைதி வழியில் நடந்தன என்பதுதான்.

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

தலைநகர் டெல்லியில் ஷாஹின்பா எனும் பகுதியில் இஸ்லாமியப் பெண்கள் சென்ற டிசம்பர் 15 (2019) அன்று முற்றிலும் அமைதி வழியில் CAA க்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடங்கினர். உலக அளவில் கவனத்தை ஈர்த்த ஒரு போராட்டமாக இது அமைந்தது. ஜனநாயகத்தில் அக்கறை உள்ள அனைத்துத் தரப்பினரும் கட்சி வேறுபாடுகள் மற்றும் மத, மொழி அடையாளங்களுக்கு அப்பால் இப்போராட்டத்திற்கு நிபந்தனை இன்றி ஆதரவளித்தனர். இதற்கிடையில் கோவிட் 19 தாக்குதல் பெரிய அளவில் பரவியபோது, அதை ஒட்டி,  போராடிய இஸ்லாமியப் பெண்கள் சென்ற மார்ச் 24, 2020 அன்று தாமாகவே போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் பிரச்சினை இத்துடன் முடியவில்லை. மிகப்பெரிய அளவில் வடகிழக்கு டெல்லி பகுதியில் சென்ற 2020 பிப் 23 அன்று கொடும் கலவரங்கள் தொடங்கின. இது பிப் 29 வரை- ஒரு வாரம் நீடித்தது. இதில் 53 பேர்கள் கொல்லப்பட்டனர். இதில் 51 பேர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. இவர்களின் பெயர்கள் உட்பட விவரங்களை இன்றளவும் ஊடகங்களில் காணலாம். இவர்களில் 36 பேர்கள் இஸ்லாமியர்கள். 15 பேர்கள் இந்துக்கள். அடையாளம் தெரியாதவர்கள் இருவர். கொல்லப்பட்டவர்கள் தவிர 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வன்முறைகள் தொடர்பாக 2200 பேர்கள் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கைகளின் போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி இந்துக்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுமாறு தனது காவல் படைக்கு ஆணையிட்டது சர்ச்சைக்குள்ளாகிப் பலராலும் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. மற்ற மதத்தினர் மனம் புண்படும்படி நடந்துகொண்டால் பிரச்சினை இல்லை என அதிகாரிகள் வெளிப்படையாகச் சொல்லும் அளவிற்கு அரசு இந்தக் கைது நடவடிக்கைகளில் நடந்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் ஆயினும் – புதுச்சேரிபோல அல்லாமல், அங்குள்ள போலீஸ் மத்திய அரசின் கீழ் உள்ளது. அதாவது டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மனைதில் கொண்டு மேலே படியுங்கள்

கைது செய்யப்பட்ட பலரும் கொடும் சட்டங்களில் உள்ளே தள்ளப்பட்டார்கள் என்பது ஊரறிந்த வரலாறு. 2020 செப்டம்பர் மத்தியில் டெல்லி காவல்துறை ஆகக் கொடூரமான  UAPA சட்டத்தை JNU மாணவிகள் தன்கார் தேவங்கன கலிதா, நடாஷா நர்வால், ஜாமியா மாணவர் ஆசிஃப் இக்பால் தன்ஹா, ஜாமியா மாணவி குல்பிஷா ஃபாதிமா, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான் ஜாமியா இணைப்புக் குழு உறுப்பினர் ஸபூரா சர்கார், மீரான் ஹைதர், ஜாமியாவின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷிஃபா உர் ரஹ்மான், மற்றும் முன்னாள் AAP கவுன்சிலர் தஹீர் உசேன், செயல்பாட்டாளர் காலித் சைஃபி முதலானோரும் இவ்வாறு கைது செய்யபட்டு கலகத்தைத் தூண்டியதாக UAPA கொடுஞ்சட்டத்தின் கீழ் உள்ளே அடைக்கப்பட்டனர். வட கிழக்கு டெல்லி வன்முறைகளின் சதிகாரர்கள் என இந்தப் 15 பேர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். வாட்ஸ் அப்  உரையாடல்கள் மற்றும் CD.R ஆகியவற்றின் அடிப்படையில் இந்தச் சட்டங்களைத் தாம் இவர்களின் மீது பிரயோகித்திருப்பதாக டெல்லி போலீசின் ஸ்பெஷல் செல் கூறியது. முன்னாள் திட்ட ஆணையத்தின் உறுப்பினர் சைதா ஹமீத், புகழ்பெற்ற  வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், பத்திரிகையாளர் பமீலா பிலிபோஸ், செயல்பாட்டாளர் கவிதா கிருஷ்ணன், பேரா நந்திதா நாராயன், முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார் முதலான பலரும் இந்தக் கைதுகளைக் கண்டித்ததோடு கைது செய்யப்பட்ட இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கையும் வைத்தனர். மோடி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் தலையிட வேண்டும் எனவும் இவர்கள் கோரினர். எதுவும் பயனில்லை.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

இவ்வாறு UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  இவர்களில் தேவங்கன கலிதா, நடாஷா நர்வால், ஆசிஃப் இக்பால் தன்ஹா ஆகிய மூவரையும் சென்ற டெல்லி உயர்நீதிமன்ற ’டிவிஷன் பெஞ்ச்’ ஒன்று சென்ற ஜூன் 15 (2021) அன்று பிணையில் விடுதலை செய்தது இந்தியா முழுவதும் ஜனநாயக சக்திகளால் வரவேற்கப்பட்டது.  ”போராடுவது மக்களின் உரிமை! அது பயங்கரவாதம் அல்ல” -எனக்கூறி மூன்று மாணவப் போராளிகளை டெல்லி உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது. கைகளில் ஆயுதங்கள் ஏதும் இன்றிப் போராடுவது  குடி மக்களின் அடிப்படை உரிமை என்பதையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

”குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டவற்றிற்கும், வழக்கில் முன்வைக்கப்பட்ட சான்றுகளுக்கும் தொடர்பில்லை. அப்படி அவர்கள் குற்றஞ் சாட்டப்படுவதற்கு போதிய ஆதாரம் இல்லை என்றால் சாதாரணச் சட்டத்தில் கைது செய்திருக்கலாமே. எதற்காக பிணையில் வெளிவர இயலாத கொடுஞ்சட்டமான UAPA சட்டத்தின் கீழ் அம் மாணவ மாணவிகளைச் சிறையில் அடைக்க வேண்டும்?” – என நீதியரசர்கள் சிதார்த் மிருதுள் மற்றும் அனுப் ஜே பம்பாலி இருவரும் தம் தீர்ப்பில் நச்சடியாகக் கேட்டிருந்தனர்.

தாருண் தேஜ்பால் விடுதலை – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

”மாற்றுக் கருத்தை ஒடுக்கும் துடிப்பிலும், பிரச்சினை கைமீறிப் போய்விடுமோ எனும் பதைப்பிலும் ஒரு அரசு தன் குடிமக்களுக்குச் சட்டபூர்வமாக அளிக்கும் ’போராடும் உரிமை’ என்பதற்கும் ’பயங்கரவாத நடவடிக்கை’ என்பதற்கும் இடையிலான எல்லைக் கோட்டை அரசு தாண்டியுள்ளது “ என மோடி -அமித்ஷா அரசின் இந்தக் கைது நடவடிக்கையை நீதிபதிகள் தம் தீர்ப்பில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது. இப்டியான சகிப்புத்தன்மையற்ற மனநிலை வளர்ந்தால் அது ஜனநாயகத்திற்கு ஒரு துக்க நாளாக அமையும் என்பதையும் தீர்ப்பு நச்சடியாக முன்வைத்திருந்தது.

இப்படியான ஒரு விமர்சனத்தைப் பொறுக்குமா இந்த அரசு !? இந்தத் தீர்ப்பு வந்த அடுத்த நாளே (ஜன 16, 2021) அரசு  இந்தத் தீர்ப்பைத் தடைசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியது.

பொய்க் குற்றம் சாட்டப்பட்டு கொடும் UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்த இந்த இரு மாணவிகள் உட்பட்ட மூன்று பேர்களை பிணையில் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் மேல்முறையீடு செய்யப்பட்டதை The Hindu போன்ற பத்திரிகைகள் கண்டனத் தொனியுடன் செய்திகளை வெளியிட்டது ஜனநாயக சக்திகள் மத்தியில் மிகுந்த உற்சாகத்திற்குக் காரணமானது. இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தைப் பாராட்டி The Hindu (ஜூன் 18, 2021) நாளிதழில் கவுதம் பாடியா எழுதியுள்ள கட்டுரை (A Judicial Pushback to a Draconian Legal Regime)  ஒன்றில், ”இன்றைய கொடூரமான சட்ட ஆளுகைக்கு மத்தியில் தோன்றியுள்ள ஒரு விடிவெள்ளி” என இந்தத் தீர்ப்பு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

’தமிழகத்தில் என்ஐஏ கிளை – மாநில உரிமைக்கு எதிரானது’: அ.மார்க்ஸ்

மோடி அரசால் மேலும் மேலும் இன்று கொடூரம் ஆக்கப்பட்டுள்ள UAPA சட்டத்தின் ஆகக் கொடூரமான அம்சம் அச் சட்டத்தின் 43 (D) 5 பிரிவில் அடங்கியுள்ளது என்பதையும் கௌதம் சுட்டிக்காட்டுகிறார்.

இப்பிரிவின்படி கேஸ் டயரி அல்லது CrPC 173 ஆம் பிரிவு ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு காவல்துறை நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என நீதிமன்றம் கருதினால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை விடுதலையை மறுக்கலாம். அடிப்படை ஜனநாயக நெறிகளுக்கு எதிராக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரத்தை முதலில் நாம் தகர்த்தாக வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னும் கூட இருக்கும் இன்றைய நீதி நெறிமுறைகளின்படியே UAPA சட்டத்தின் ஆகக் கொடூரமான இந்த 43 (D)5 சட்டத்திற்கு அப்பாலும் கூட குற்றத்தை நிறுவும் அடிப்படைக் கடமை பிராசிக்கியூஷனுக்கு உண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அந்த அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் எனும் கோட்பாட்டை(adversarial system of justice) இன்னும் நமது நீதிமுறை கைவிடவில்லை.  நீதியரசர்கள் சிதார்த் மிருதுள் மற்றும் அனுப் ஜே பம்பாலி இருவரும் தமது தீர்ப்பில், ’இந்த 43 (D)5 சட்டப்பிரிவும் நமது கிரிமினல் சட்ட அணுகல்முறையின் அடிப்படைகளுக்கு எதிரானது’ என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஹத்ராஸ் வழக்கு: `இது ஆதித்யநாத்தின் தோல்வியை மூடி மறைக்கும் செயல்’ – மின்னஞ்சல் பிரச்சாரம்

வரவேற்கத்தக்க இந்த நல்ல தீர்ப்பின்மீது இன்று நரேந்திரமோடி – அமித்ஷா அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். வேறென்ன இவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்.

வெறும் காவல்துறையின் குற்றச்சாட்டுகளை வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு ’பெயில்’ உரிமையை மறுத்துவிட முடியும் என்றால் பின் பிறகு நீதிமன்றத்தின் இருப்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது. சான்றுகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் மட்டுமே குற்றம் நிறுவப்படமுடியும் என்பதுதான் நமது நீதிவழங்குமுறையின் அடிப்படை. குற்ற நிரூபணச் சுமை இப்போதும் பிராசிகியூஷனுக்குத்தான் உண்டு.

மக்கள் தொகைப் பெருக்கமுள்ள நமது நாட்டில் வழக்குகள் விசாரணக்கு வந்து நீதி அளிப்பது என்பது ஏராளமான காலதாமதத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு நிகழ்வாகிறது. 23 ஆண்டுகள் வரை விசாரணை செய்யப்படாமலேயே சிறைகளில் அடைக்கப்பட்டுப் பின்னர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்ட வரலாறுகள் நம் நாட்டில் உண்டு என்பதை நான் பலமுறை என் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். இன்று கௌதம் பாட்டியாவும் தன் கட்டுரையில் அதை வலியுறுத்தியுள்ளார்.

‘ஒடுக்குமுறைக்கெதிராகப் பாடுபடக்கூடியவர்கள் தேசவிரோதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர்’ – தேவங்கனா கலிதா

சில ஆண்டுகளுக்கு முன் பிரகாஷ்காரட் தலைமையில் சென்ற சி.பி.எம் கட்சியின் உயர்மட்டக் குழு ஒன்று அபோதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து இவ்வாறு பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுப் பின் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு வாழ்விழந்த இஸ்லாமிய சிறைக் கைதிகளின் பட்டியல் ஒன்றைத் தந்தனர். ஆனாலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இன்று கண்முன் விசாரணை இல்லாமல் பீமா கொரேகான் வழக்கில், நம் நூலோர்களும் மேலோர்களும் இரண்டாண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிக்காக வீதியில் நின்று குரல் எழுப்பிய, எந்த முன் குற்ற நடவடிக்கைகளிலும் பங்குபெற்றிராத அந்தப் பச்சிளம் குஞ்சுகளை விசாரணை இல்லாமல் ஓராண்டு சிறையில் அடைத்து திருப்தி கண்டுள்ள மோடி அரசு இந்தத் தீர்ப்புக்கு எதிராக அடுத்த நாளே மேல்முறையீடு செய்த தீவிரத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேல்முறையீடும் உச்சநீதிமன்றத்தின் அணுகல் முறையும்

மோடி அரசின் இந்த மேல்முறையீட்டிற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உடனடியாக (ஜூன் 18, 2021) அளித்தது.”தேவங்கன கலிதா, நடாஷா நார்வல், ஆசிஃப் இக்பால் தன்ஹா ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள பிணை விடுதலையில் தலையிடமாட்டோம்”  என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரம். ஆனால் அதே நேரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு எந்த ஒரு விசாரணையிலும் ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது எனவும், சம்பந்தப்பட்டவர்கள் (மேற்கொண்டு வழக்கில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் வகையில்) இந்தத் தீர்ப்பைச் சார்ந்திருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அதே தீர்ப்பில் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது.

‘பாலினப்பாகுபாடின்றி மாற்றுப்பாலினத்தவரையும் அர்ச்சகராக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசை வலியுறுத்தும் தமுஎகச

முன்னதாக அரசுத்தரப்பில் சாலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா  வாதிடும்போது (டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு) UAPA சட்டத்தை மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்தையும் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டது (!) எனச் சீறினார். டெல்லி கலவரத்தில் 53 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் 700 பேர்கள் காயமடந்ததாகவும் அவர் குறிப்பிட்டர். இவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள் என்பதை அவர் சொல்லவில்லை.

சுமார் மூன்று மாத காலம் உலகமே வியக்கும்படியாக அமைதியாக நடந்த போராட்டம் அது.  பெருந்தொற்றுத் தாக்குதல் உக்கிரமானபோது போராடிய அவர்களாலேயே அது நிறுத்திக் கொள்ளவும் பட்டது. அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள் யார்? கலவரத்தைத் தூண்டியவர்கள் யார்? கைது செய்யும்போது இந்துக்கள் மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என ஆணையிட்டது யார்? என்பதை எல்லாம் சாலிசிட்டர் ஜெனரல் கூறவில்லை.

கொலம்பியாவின் எழுச்சி அதிபர் டியூக்கிற்கு  எதிரானதல்ல; நவீன தாராளவாதத்திற்கு எதிரானது – ஜெனிஃபர் பெடராசாவுடன் ஓரு நேர்காணல்

சாலிசிடர் ஜெனரல் தனது வாத்த்தில் “அந்த மூவரும் வெளியில் விடப்பட்டாலும்” இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு  சிறையில் ஓராண்டு காலமாக வதியும் பிற யாரையும் விடுதலை செய்ய இந்தத் தீர்ப்பு ஒரு முன்னோடியாக அமையக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளதும் அதை ஏற்று, “பிணை விடுதலைக்கு இந்தத் தீர்ப்பை மற்றவர்கள் யாரும் மேற்கோள்காட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத் தக்கது.

பிணையில் விடுதலையாகி உள்ள நடாஷா நர்வால் இப்படியான அநீதிகள் தட்டிக் கேட்கப்படாமல் போய்விடலாகாது எனும் தன் உணர்வு வலுவாகி உள்ளது எனவும் போராட்டம் தொடரும் எனவும் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. இவர்கள் இருவரும் 2015 முதல் செயல்பட்டு வரும் ”பிஞ்ஜ்ரா டோட்” (Pinjra Tod) எனும் பெண்ணுரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள். “அநீதிகளுக்கு எதிராகச் சிறகுகளை விரிப்போம்” என முழங்கும் இப் பெண்ணியர்கள் இந்த வழக்கிலும் அநீதிக்கு எதிராகத் தங்களின் போரட்டம் தொடரும் என விடுதலைக்குப் பிந்திய நேர்காணல்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

(கட்டுரையாளர் அ.மார்க்ஸ் ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்