உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழக சிறைகளில் இருக்கும் கைதிகளைப் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், தகுதிவாய்ந்த சிறைக்கைதிகளை பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு மே 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தகுதிவாய்ந்த சிறைக்கைதிகளைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து சிறைக்கைதிகளைக் காப்பது தொடர்பாக கடந்த ஆண்டு தானே முன்வந்து வழக்கொன்றைப் பதிவுசெய்த உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் எந்தெந்த கைதிகளை விடுவிப்பது என்பதை முடிவுசெய்யத் தமிழ்நாட்டில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்
“அந்த உயர்நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் 4182 சிறைகைதிகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பிணை முடிந்து மீண்டும் சிறைக்குச் திரும்பி விட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் மே 7 ஆம் தேதி 5 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில், பீகார் மாநில அரசை எதிர்த்து அர்னேஷ் குமார் தொடர்ந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் முன்வைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக எவரொருவரும் கைது செய்யப்படக் கூடாது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்கள் அதே வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயர்நிலைக் குழு அமைக்காத மாநிலங்கள் உடனடியாக அந்தக் குழுக்களை அமைக்க வேண்டும்.” என்று உத்தரவை நினைவூட்டியுள்ளார்.
“உயர்நிலைக் குழுவில் புதிதாக சிறைக்கைதிகளை பிணையில் விடுவிப்பது பற்றிப் பரிசீலிக்கும். அதேவேளையில் மார்ச் 23, 2020 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி விடுவிக்கப்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் மீண்டும் பிணையில் விடுவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மீண்டும் 90 நாட்களுக்குப் பரோல் வழங்க வேண்டும். உயர்நிலைக் குழுவின் முடிவுகளும் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் அந்தந்த மாநில சிறைத் துறையின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ” என்று உச்சநீதிமன்றம் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தமிழக அரசின் சிறைத்துறை காலதாமதம் செய்யாமல் உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைக்கைதிகளை பிணையில் விடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.