Aran Sei

பீமா கோரேகான் வழக்கு : சிறையில் உள்ள செயற்பாட்டாளர்களை விடுவிக்க கோரி மகாராஷ்ட்ர முதல்வருக்கு குடும்பத்தினர் கடிதம்

பீமா கோரேகான் வழக்கில், மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை, கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்யக் கோரி, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தில் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், ரோனா வில்சன் உள்ளிட்ட , இவ்வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் உள்ள 15 செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையிலும், பெண்கள் மத்திய மும்பையில் உள்ள பைகுல்லா சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பீமா கோரேகான் செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள் – இந்தியாவிடம் ஐ.நா வலியுறுத்தல்

அக்கடிதத்தில், செயற்பாட்டாளர்கள் பலர் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவரான ஜோதி ஜக்தாப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கும் ஒரு உயர் அதிகாரக் குழுவை உருவாக்க அனைத்து  மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. குறைந்தபட்சம் அவர்களை இடைக்கால பிணையிலாவது விடுவிக்குமாறு அக்குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லோரும் பேராபத்தில் சிக்கியிருக்கும் இந்த அவநம்பிக்கையான சூழலில், அவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அனைவரும் கவலைப்படுகிறோம் என்றும் ஆகவே, எங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் உங்களிடம் மனதார கேட்டுக்கொள்கிறோம் என்றும் மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டு எல்கர் பரிஷாத் கூட்டத்தில் பங்கேற்ற சில செயல்பாட்டாளர்கள், வன்முறையைத் தூண்டும வகையில் பேசியதாகவும், அதுவே அதற்கு அடுத்த நாள், பீமா கோரேகானில் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்தது என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்