Aran Sei

‘மோடிக்கு வாக்களித்ததற்காக வருந்துகிறேன்’ – ஜம்முவைச் சேர்ந்த ராகுல் சர்மா

Image Credits: DNA India

2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5 அன்று, கத்துவாவில் வசிக்கும் ராகுல் சர்மா, மிக உற்சாகமாக இருந்தார். அவரும் அவரது நண்பர்களும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்துச் செய்யப்பட்டதற்காக இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்தப் பிரிவுகள் முந்தைய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கியது.

அப்போது, ஜம்முவின் பெரும்பாலானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தன்னை ஒரு ‘தீவிர’ மோடி ஆதரவாளர் என்று  ராகுல் சர்மா அழைத்துக்கொண்டார். அவர் அந்த நாளைப் பிரதமர் நரேந்திர மோடி கூறும் ‘ஆச்சே தினின்’ (நல்ல நாள்) ஆரம்பம் என்று அழைத்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று அவர் நினைத்தார்.

பதினைந்து மாதங்களுக்குப் பிறகு, ராகுலின் மனநிலை மற்றம் அடைந்துள்ளது. “எங்களுக்கு ‘ஆச்சே தின்’ தேவையில்லை. எங்களுக்கு ‘புரே தின்’ (மோசமான நாள்) மீண்டும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். “யாரோ ஒருவர் மக்கள் மீது ‘ஆச்சே தினை’ திணிக்க விரும்புவதும், மக்கள் அதனை ஏற்க மறுப்பதும் இதுவே முதல் முறை” என்று அவர் விமர்சித்துள்ளார்.

புதிய நிலச் சட்டங்கள் மற்றும் ஆகஸ்ட் 5 க்குப் பின் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களை மனித உரிமை மீறல் என்று ராகுல் சர்மா வரையறுத்துள்ளார். “முதலில், இது காஷ்மீரிகளுக்கு நிகழ்ந்தது, இப்போது ஜம்மு மக்களுக்கும் நிகழ்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

ஜம்முவில் மோடி ஆதரவாளராக இருந்து மாறியது ராகுல் மட்டுமல்ல. ஜம்முவுக்கு அருகில் உள்ள மாணவர்களைப் பயிற்றுவிக்கும் வேதியியலில் பட்டதாரி தான்யா பந்த்ரால், பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்ததாகக் கூறியுள்ளார். “சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நான் கொண்டாடினேன். ஆனால், அவ்வாறு செய்ததற்கு நான் இப்போது வருந்துகிறேன்” என்று தான்யா தெரிவித்துள்ளார்.

“இதனால் ஜம்முவுக்கு நன்மை ஏற்படும் என்று நான் நினைத்தேன். ஆனால் 15 மாதங்கள் கழித்து, எனக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். நாஙகள் சீரழிந்துவிட்டோம். எங்கள் வேலைகளும் நிலங்களும் பறிபோகிவிட்டன” எனத் தான்யா கூறியுள்ளார்.

தான்யா மற்றும் ராகுலை போலவே, ஜம்முவில் வசிக்கும் பலரும் ஆளும் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். “பாஜக எங்களின் ‘தேச உணர்வு’ மற்றும் ‘தேச பற்றை’ பயன்படுத்தி எங்களை ஏமாற்றிவிட்டது என்று தான்யா தெரிவித்துள்ளார்.

“இப்போது, அரசியலமைப்பின் ​​370-வது பிரிவை ரத்து செய்தது தவறு என்று நான் உணர்கிறேன். சட்டத்தில் சில திருத்தங்கள் செய்திருக்கலாமே தவிர, முழு சட்டத்தையும் ரத்து செய்திருக்க கூடாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது. அப்போது அக்கட்சி வெளியிட்டதேர்தல் அறிக்கையில் 370 வது பிரிவை அகற்றுவதாக உறுதியளித்தது.

ஜம்மு பல்கலைக்கழக சட்ட மாணவர் தீரஜ், “காஷ்மீரிகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க குறைந்தபட்சம் ‘போராட்டங்களிலாவது ஈடுபட்டனர்’, ஆனால், அதே சமயம், ஜம்முவின் மக்கள் தேசியவாதத்தில் சிக்கித் தவித்தனர்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், ராகுல் சர்மா, மோடிக்கு வாக்களித்ததற்காகவும், 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது கொண்டாடியதற்காகவும் வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

“நான் என்னிடமும் ஜம்மு-காஷ்மீர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 370 வது பிரிவை மீட்டெடுக்கவும், அனைத்து உரிமைகளை பாதுகாக்கவும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் கூட்டு முயற்சி நம்பிக்கை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

(‘தி வயர்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்