மத்திய அரசு புதிய தொழில்நுட்ப விதிகள் அறிவித்து ஒரு வார காலம் கடந்திருக்கும் நிலையில், இந்த விதிகள் ‘அடிப்படைகளை மாற்றுகிறது’ மற்றும் ‘நியாயமற்ற நிபந்தனைகளை’ விதிக்கிறது, எனவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (ஈஜிஐ) அமைப்பு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘சுயாதீன சமூக ஊடகத்தை’ கட்டுப்படுத்தும் வகையில், “ஊடக சுதந்திரத்திற்கு இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கும் பாதுகாப்புகளை அரசு மறுக்க முடியாது” என்று கூறியுள்ள ஈஜிஐ, புதிய விதிகள், “டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும், இந்தியாவில் ஊடக சுதந்திரத்தை தீவிரமாகக் குறைப்பதற்கான வழியை மேற்கொள்கிறது.” என கூறியிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய விதிகள் அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் சக்தி கவலையளிக்கிறது. எந்தவொரு நீதித்துறை மேற்பார்வையுமின்றி நாட்டில் எந்தப் பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியையும் தடுக்க, நீக்க அல்லது மாற்றியமைக்க அவை மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது. மேலும், அனைத்து வெளியீட்டாளர்களுக்கும் ஒரு குறை தீர்க்கும் வழிமுறையை நிறுவக் கட்டாயப்படுத்துகிறது” என்று ஈஜிஐ அறிக்கை குறிப்பிடப்பட்டிருக்கிறதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
புதிய விதிகளை உருவாக்குவதில், அரசு சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை, எனவே அது “விதிகளை மீறி அனைவருடனும் அர்த்தமுள்ள ஆலோசனையை நடத்த வேண்டும்” என்று ஈஜிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கப் புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிட்டது.
நெட்ஃபிக்ஸ், யூடியூப் போன்ற ஓடிடி தளங்கள் மூன்று அடுக்கு குறைதீர்க்கும் வழிமுறையை ஏற்படுத்த இந்த விதிகள் வலியுறுத்துவதோடு, மேலும் வயது வரம்பின் அடிப்படையில் அவற்றின் உள்ளடக்கத்தை ஐந்து வகைகளாக சுய வகைப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தது.
அமேசான் பிரைமில் வெளியான “தாண்டவ்” தொடரில் இந்து தெய்வங்களை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.