விழுப்புரம் மாவட்டத்தில் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க வேண்டுமென விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ளா கடிதத்தில், “விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 600 ஆக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 649 ஆக்சிஜன் படுக்கைகளும், 192 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளும், 103 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும் (ICU)கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவற்றில் நேற்றைய (03.06.2021) நிலவரப்படி 522 ஆக்சிஜன் படுக்கைகளும், 90 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளும், 103 தீவிர சிகிச்சைப் படுக்கைகளும் நிரம்பியுள்ளன. தீவிர சிகிச்சைப் படுக்கை (ICU) ஒன்று கூட காலியாக இல்லையென்றும், தீவிர சிகிச்சைப் படுக்கைகள் காலியாக இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லையென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக 2 வார்டுகளைக் கூடுதலாக ஏற்படுத்தவும், தீவிர சிகிச்சைப் படுக்கைகளின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 55 ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே கொரோனா நோயாளிகளை உள் நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை தருவதற்கான ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினால் கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.