Aran Sei

‘உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குங்கள்’ – முதல்வருக்கு ரவிகுமார் வேண்டுகோள்

ச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல்  வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ரவிகுமார் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவெங்கிலுமுள்ள சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது (Suo Motu writ Petition ( C ) No.1 /2020).  07.05.2021 அன்று அவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முக்கியமான சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் நான்காவது அம்சமாக,  “ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு, மேலும் 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்”  என்று உத்தரவிட்டுள்ளது.” என்று உச்சநீதிமன்ற தீர்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

‘பெரும் நம்பிக்கையுடன் உள்ளோம்’ – திமுக வெற்றி குறித்து அற்புதம்மாள்

மேலும், “2020 நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் பரோல், வழங்கப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்பதை ரவிகுமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இணைநோய்களின் (comorbidities) காரணமாக, கொரோனா தொற்று ஏற்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சிறை மருத்துவரும் சான்றளித்துள்ளார். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு (பேரளிவாளன்) 90 நாட்கள் பரோல்  வழங்கிட, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று ரவிகுமார், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்