அம்மா குடிநீர் திட்டம் வழியாக மிகக் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிதண்ணீரைப் பேருந்துப் பயணிகள் பெற்றுப் பயனடைந்தனர் என்றும் மீண்டும் குடிநீர் உற்பத்தி ஆலையை இயங்கச் செய்து அந்தத் திட்டத்தை ‘அரசு குடிநீர் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு நல்ல குடிதண்ணீரைக் குறைந்தவிலையில் கொடுப்பதற்காக 2013 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் ‘அம்மா குடிநீர் திட்டம்’ துவக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அதற்கான தண்ணீர் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 இடங்களில் விற்பனை மையங்களும் செயல்பட்டுவந்தன.” என்று நினைவூட்டியுள்ளார்.
மிகக் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிதண்ணீரைப் பேருந்துப் பயணிகள் பெற்றுப் பயனடைந்தனர் என்றும் பல்லாயிரக் கணக்கானோர் வேலை வாய்ப்பையும் பெற்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி அரசால் கைவிடப்பட்ட அந்தத் திட்டம் கொரோனா காலத்தில் முற்றாக நிறுத்தப்பட்டது. கட்சி பேதம் பார்க்காமல் நல்ல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் குடிநீர் உற்பத்தி ஆலையை இயங்கச் செய்து அந்தத் திட்டத்தை ‘அரசு குடிநீர் திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய பதிவுகள்:
தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு ரவிக்குமார் வேண்டுகோள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.