ஈழத்தமிழர்கள் வசிக்கும் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் அவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் ஈழத் தமிழ் அகதிகள் முகாம் கடந்த முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு பதிவு செய்யப்பட்ட 414 குடும்பங்கள் உள்ளன. ஆண்கள் 508 பேர், பெண்கள் 583 பேர், ஆண் குழந்தைகள் 139 பேர், பெண் குழந்தைகள் 123 பேர் என மொத்தம் 1353 பேர் உள்ளனர். அவர்களைத்தவிர சுமார் 60 பேர் பதிவுக்காக விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை உலக அகதிகள் நாளான ஜூன் 20 அன்று நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும், அவர்கள் கூறியதன் அடிப்படையிலும் நான் நேரில் கண்டதன் அடிப்படையிலும் கோரிக்கைகளைத் பரிசீலனைக்கு முன்வைப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த முகாமில் வசிப்பவர்களுக்கென அரசு 448 வீடுகளைக் கட்டித் தந்துள்ளது. அதில் சுமார் 20 வீடுகள் முழுதுமாக சேதமடைந்துவிட்டன. மீதமுள்ள வீடுகளும் சேதமடைந்துள்ளது. எனவே . அவர்கள் அனைவருக்கும் தரமான வீடுகளைக் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், போதிய கழிப்பறை வசதி இல்லாததால் முகாம்களில் வாழும் பெண்கள் அதிக அளவில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் . எனவே வீடுகளோடு சேர்த்து கழிப்பறைகளைக் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர்களுக்குத் தரமான இலவசக் கல்வியை கல்லூரிப் படிப்பு வரை வழங்கிடவும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளிலும் அவர்களுக்கு இலவசமாகக் கல்வி கிடைத்திடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு வேலைவாய்ப்பில் அவர்களுக்கும் வாய்ப்பளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளிலும்; தனியார் தொழில் நிறுவனங்களிலும் தகுதியுள்ள ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டுமெனவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
மேலும், முகாமில் உள்ளவர்கள் விலை கொடுத்துத் தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அவர்களுக்குக் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , முகாமில் உள்ள பெண்கள் அமைத்துள்ள சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பதிவுக்காக விண்ணப்பித்திருக்கிற 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்னும் பதிவு கிடைக்காத நிலையே உள்ளது. எனவே, விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் பதிவு வழங்கப்படவேண்டும் எனவும், முகாமில் வசித்த இருவர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள 3 லட்சம் நிதி உதவி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரவிக்குமார் எம்.பி முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதோடு, “முகாமில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திடவும், இலவசமாக முகக் கவசங்கள்,சானிடைசர் வழங்கிடவும் ,முகாமுக்குள் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கு ஒரு துணை மருத்துவ நிலையத்தை அமைத்திடவும் வேண்டும், கொரோனா காலத்தில் ஆன்லைன்’ வகுப்பில் பாடம் நடத்தப்படுவதால் அதற்கான வசதிகள் ஏதுமின்றி முகாமிலுள்ள பிள்ளைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அவர்களது கல்வியைப் பாதுகாத்திட சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈழத் தமிழ் அகதிகளில் கணிசமானோர் இந்தியா வம்சாவளித் தமிழர்கள் ஆவர். இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்குக் குடியுரிமையும் மறுவாழ்வும் அளிக்கவேண்டியது ஒன்றிய அரசின் சட்டப்படியான கடமையாகும். அதை நிறைவேறுமாறும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும்,. சிறப்பு முகாம்களில் தண்டனைக்காலம் முடிந்ததற்குப் பிறகும் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவித்து அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுப்பவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.