அமலாக்கத்துறையின் இயக்குனர் மற்றும் மத்திய விசாரணை அமைப்பு (சிபிஐ) இயக்குநரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கும் ஒன்றிய அரசின் அவசரச் சட்டமானது, ஜனநாயக அமைப்புகளை அழிக்கும் செயல் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று(நவம்பர் 14), ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மனோஜ் ஜா, “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தலைமை பொறுப்புகளின் பதவிக் காலத்தை அவசரச் சட்டம் வழியாக நீட்டிக்க முடிவு செய்திருப்பது ஒன்றிய அரசின் எண்ணம் என்ன என்பது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் பிரதமரும், நம் ஜனநாயகத்தின் வலிமைமிக்க தூணுமான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 அன்று இந்த அவரச்சட்டத்தை கொண்டுவருவதன் வழியாக, ஜனநாயக அமைப்புகளை அழித்து, ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதே ஒன்றிய அரசின் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(நவம்பர் 14), அமலாக்கத்துறை இயக்குநர் மற்றும் சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. தற்போது, ஒன்றிய விஜிலென்ஸ் ஆணையம் (சிவிசி) சட்டம், 2003-ன்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.