Aran Sei

இந்துத்துவாவின் புதிய கண்டுபிடிப்பு ‘எச்சில் ஜிகாத்’ – உணவில் எச்சில் துப்பியதாக இஸ்லாமியர்கள் கைது

வம்பர் 15 ஆம் தேதி, உத்தரபிரேதச மாநிலம் காசியாபாத், லோனி பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் இஸ்லாமியர் ஒருவர் அடுப்பின் அருகே நின்று சப்பாத்தி தயாரித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த குறிப்பிட்ட வீடியோவை விவரிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்த, இந்து ரக்ஷா தள் என்ற அமைப்பைச் சேர்ந்த சுமித் சூட் என்பவர் “இந்த பன்றிகளிடம் (இஸ்லாமியர்கள்) உணவருந்த வரும் இந்துக்களுக்காக இது. நீங்கள் தினமும் இங்கு வந்து உண்ணும்போது இதுபோன்றுதான் எச்சில் துப்பி தருகிறார்கள். இந்த முல்லாக்களை (இஸ்லாமியர்களை) எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவிர்ப்பது நன்று. என்னுடைய சகோதரர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இந்த பன்றிகளிடம் சாப்பிடாதீர்கள். அவர்கள் உங்களுக்கு அறுவெறுப்பானதையே உண்பதற்கு தருகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

நவம்பர் 16 ஆம் தேதி, இந்த வீடியோ தொடர்பாக நியூஸ் 18 (இந்தி) தொலைகாட்சியில் அமன் சோப்ரா என்ற பத்திரிகையாளர் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார். அதில், உண்மைக்குப் புறம்பான தகவல்களையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும் கருத்துகளை தெரிவித்ததாக தி வயர் இணையதளம் கூறுகின்றது.

இதற்கு மறுநாள் (நவம்பர் 17 ஆம் தேதி) அமன் சோப்ரா-வை டிவிட்டரில், பிரதமர் நரேந்திரமோடி பின்தொடரத் தொடங்கியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்தும், அமன் சோப்ரா நடத்திய விவாத நிகழ்ச்சி குறித்தும், நியூஸ் லாண்ட்ரி உட்பட சில சுதந்திர ஊடகங்கள் உண்மைத் தன்மையை அறிந்து (Fact Check) செய்திகளை வெளியிட்டன.

இதைத்தொடர்ந்து, நவம்பர் 18 ஆம் தேதி, சமூக வலைதளத்தில் தான் பகிர்ந்திருந்த தன்னுடைய விவாத நிகழ்ச்சியை அமன் சோப்ரா நீக்கிவிட்டதாகவும், அதுபோலவே, நியூஸ் 18 அதிகரப்பூர்வ சமூக வலைதளங்களிலிருந்தும் அந்த விவாத நிகழ்ச்சி நீக்கப்பட்டதாகவும் தி வயர் கூறுகின்றது.

இதுகுறித்து தி வயர் இணையதளம், ராஷ்ட்ரிய ரக்ஷா தள் அமைப்பின் உத்தரபிரதேச மாநிலத் தலைவர் அமித் பிரஜாபதியிடம் பேசியபோது, தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த இஸ்லாமியரின் உணவு விடுதிப் பக்கம் போனதாகவும், அப்போது அவர் சப்பாத்தியில் எச்சில் துப்பியதை கண்டு அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். அன்று மாலை தங்கள் அமைப்பினர் அந்த உணவு விடுதிக்கு சென்று இதுகுறித்து பிரச்சனையை எழுப்பியபோது, அந்த இஸ்லாமியர் அவர்களிடம் தவறாக நடந்துகொண்டதால் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தாக பிரஜாபதி தி வயர்-யிடம் கூறியுள்ளார்.

ஆனால், ராஷ்ட்ரிய ரக்ஷா தள் அமைப்பு இதுபோன்று நடந்துகொள்வது இது முதல்முறையல்ல என்று தி வயர் கூறுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவில், ஒரு உணவு விடுதியின் வாசலில் ராஷ்ட்ரிய ரக்ஷா தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒரு இஸ்லாமியரை தள்ளிவிட்டபடி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுவதை பார்க்க முடிகிறது. பாட்டிய சௌக் என்ற இடத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில், இஸ்லாமியர் ஒருவர் உணவுப் பொருளில் வேண்டுமென்றே எச்சில் துப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த செயலை ராஷ்ட்ரிய ரக்ஷா தள் அமைப்பினர் “எச்சில் ஜிகாத்” என்று குறிப்பிட்டதாக தி வயர் கூறுகின்றது.

மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளிலும், தொடர்புடைய இஸ்லாமியர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் நியூஸ் 18 (இந்தி) தொலைகாட்சி செய்தியாக வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த இணையதளம் இது தற்செயலான நிகழ்வுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்